PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

குப்பை கழிவுகளில் இருந்து, தரமான இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்து வரும், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியைச் சேர்ந்த, துப்புரவு அலுவலர் பாண்டிச்செல்வம்:
எங்கள் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, எப்படி பயனுள்ளதாக மாற்றலாம் என்று யோசித்ததன் விளைவு தான், இந்த திட்டம். கடந்த எட்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். முதலில், நகரப் பகுதியில் இருக்கும் வீடுகளிலேயே மட்கும் குப்பை, மட்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்கும் பழக்கத்தை உருவாக்கினோம். இதற்காக, மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
சேகரிக்கப்படும் மட்கும் கழிவுகளை, நகராட்சி மின் மயான வளாகத்தில் உள்ள நுண்ணுயிர் செயலாக்க மையத்துக்கு கொண்டு சென்று இயற்கை உரம் தயாரிக்கிறோம். மாதம் சராசரியாக, 30 ஆயிரம் கிலோ உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காய்கறி கழிவுகள் மற்றும் பழக் கழிவுகளுடன், பூங்காக்கள், சாலைகள், அரசு அலுவலகங்கள் என பொது இடங்களில் சேகரிக்கப்படும் இலை, தழைகளையும் சேர்த்து உரம் தயாரிப்பதால் வீரியமிக்கதாக உள்ளது.
குறிப்பாக, மூலிகை தாவரங்கள் கலப்பதால் பூச்சி, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட உரமாக கிடைக்கிறது. இதனால், இந்த உரத்தை பயன்படுத்தும்போது, பயிர்களில் பூச்சிகளின் தாக்கம் வெகுவாக குறையும்.
இந்த உரத்தில் உள்ள சத்துகள் குறித்து அறிய, அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், மதுரையில் இயங்கி வரும் வேளாண் கல்லுாரியில் எங்கள் இயற்கை உரத்தை கொடுத்து, தர பரிசோதனை செய்து சான்றிதழும் பெற்றுள்ளோம். இந்த உரத்தை, விவசாயிகளுக்கு கிலோ 5 ரூபாய் என மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்கிறோம்.
அதேபோல், மின் மயான வளாகத்தில் குப்பை மேடாக இருந்த, 40 சென்ட் பரப்பை சுத்தப்படுத்தி தோட்டம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டோம். நீர்ப்பாசன வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைத்தோம். நாங்கள் தயாரித்த இயற்கை உரத்தை மட்டுமே அடி உரமாக போட்டு, காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்கிறோம்.
இந்த தோட்டத்தை ஆசையாகவும், அர்ப்பணிப்புடனும் பராமரிப்பது, எங்கள் நகராட்சி துாய்மை பணியாளர்கள் தான். அதனால், இங்கு விளையும் பழங்கள், காய்கறிகளை அவர்களே அறுவடை செய்து, வீட்டு தேவைக்கு இலவசமாக எடுத்து கொள்கின்றனர். தோட்டத்தை பார்வையிட வரும் பொதுமக்களுக்கும் மீதமிருக்கும் பழங்களை இலவசமாக கொடுக்கிறோம்.
தொடர்புக்கு: 77089 00518.
