PUBLISHED ON : ஜூலை 01, 2021 12:00 AM

ஏழைகள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோருக்கு உதவுவதையே தன் வாழ்க்கை முறையாக கொண்டிருப்பது பற்றி கூறும் சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த சிவகாமி: சமீபத்தில் அரசு மருத்துவமனையிலிருந்து, காலை 11:00 மணிக்கு செவிலியர் ஒருவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்தார்.அங்கு சென்று பார்த்போது, மனைவியை இழந்திருந்த ஒரு முதியவர், சாலையில் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து, மூன்று மாத சிகிச்சைக்கு பின் குணமாகி இருந்ததை அறிந்தேன்.
அந்த முதியவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்த செவிலியர்கள் அவரிடம் பேசிய போது, போதிய தகவல்களை பெற முடியாததால், என்னை அணுகி இருந்தனர். அந்த முதியவரிடம் பேசிய போது, அவருக்கு திருவண்ணா மலை சொந்த ஊர் என்பது தெரிந்தது. அவர் சொன்ன தகவல்களை வைத்து, நிறைய போன் செய்து, கடைசியில் உறவினர்களை கண்டுபிடித்து விட்டேன். வந்து அவரை அழைத்துச் செல்லுமாறு கூறிய போது, 'அவர் எங்கள் சொந்தமே இல்லை; பத்திரமாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள்' என்று கூறி, போனை துண்டித்து விட்டனர்.போலீஸ் உதவியுடன், அவரை காப்பகத்தில் சேர்ப்பதற்கான பணிகளை செய்து முடித்து வீடு திரும்பிய போது, இரவு 11:00 மணி இப்படி தான் பல நேரங்கள் ஆகும்.அண்ணாநகரில் சாலையில் சுற்றித் திரிந்த நடுத்தர வயது பெண்ணை பிடித்து, போலீசில் உட்கார வைத்திருந்தனர்.
அந்த பெண்ணிடம் பக்குவமாக பேசியதில், அவர் மிகவும் அதிகமாக படித்தவர் என்பதும், நாட்டிலேயே ஒரு சிலர் மட்டுமே படித்துள்ள அந்த படிப்பில் தேர்ச்சி பெற்றவர் என்பதும், திடீரென இப்படி மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையில் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது.வட மாநிலத்தை சேர்ந்த அவரை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தேன்; அவர்களுக்கு மகிழ்ச்சி.இன்னொரு பெண்ணை மீட்டு, அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென என்னை கடித்து விட்டார். அவரிடம் அன்பாக பேசி, காப்பகம் ஒன்றில் சேர்த்து வீடு திரும்பினேன்.
இன்னொரு பெண், சென்னையின் ஆச்சாரமான ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்; மெத்த படித்தவர். ஒரே மகன். கணவர் இறந்ததும், மகன் தாயை சேர்த்துக் கொள்ள விரும்பாமல் அப்படியே விட்டு விட்டார். பசியால் சாலைகளில் அலைந்தவரை மீட்டு, காப்பகத்தில் சேர்த்து விட்டேன்.நான், தேனி மாவட்டத்தை சேர்ந்தவள். எனக்கு கணவர், மகன் உள்ளனர். பெரிய அளவில் வருமானம் கிடையாது. வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன். எனினும், துன்பத்தில் உழல்பவர்களுக்கு உதவி செய்வதையே, தொண்டாக கருதி வாழ்கிறேன்!
