/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உயில் எழுதுவோர்கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன?
/
உயில் எழுதுவோர்கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன?
PUBLISHED ON : ஜூன் 22, 2022 12:00 AM

ஒருவர் எழுதி வைக்கும் உயில், என்னென்ன காரணங்களால் செல்லாமல் போகும் என்பது பற்றி கூறும் நிதி ஆலோசகர், சி.பாரதிதாசன்:
ஒருவர் உயில் எழுதும் போது, அதில், இரண்டு சாட்சிகள், தேதி குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உயில் செல்லாது. 'ஒரு உயிலில், ஒருவர் மட்டுமே சாட்சி கையெழுத்திட்டு இருந்ததால், அந்த உயில் செல்லாது' என, உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிஉள்ளது. மேலும், உயிலில் சாட்சிகளாக கையெழுத்திட்டிருப்போரின் வயது, 18க்கு மேல் இருக்க வேண்டும். சாட்சியாக கையெழுத்திடுபவர், உயில் வாயிலாக பலன் அடையும் நபராகவோ அல்லது உயிலை செயல்படுத்துபவராகவோ இருக்கக் கூடாது. ஒருவர் தன் வாழ்நாளில், எத்தனை உயில்களை வேண்டுமானாலும் எழுதலாம். அப்படி எழுதும் போது, பழைய உயிலை கட்டாயம் அழித்து விட வேண்டும். ஒருவரின் மறைவுக்கு பின், அவர் கடைசியாக எழுதிய உயில் தான் செல்லுபடியாகும். கடைசியாக எழுதிய உயில் கிடைக்காத நிலையில், பழைய உயில் பயன்பாட்டுக்கு வந்து விடும்.உயிலில் அதை எழுதியவரின் கையெழுத்து அல்லது கட்டை விரல் பதிவு கட்டாயம் இருக்க வேண்டும். உயிலானது, ஒருவர் தெளிவில்லாத மனநிலையில் இருக்கும் போது எழுதப்பட்டிருந்தாலும், அது செல்லாது. சில குடும்பங்களில் பாரம்பரிய சொத்துகள், 18 வயதுக்கு உட்பட்ட இளவல்களுக்கு, அதாவது, மைனர்களுக்கு வந்திருக்கும். இந்த நிலையில், அவர்கள் உயில் எழுதினால் அது செல்லாது.ஒருவர் தன் அனைத்து சொத்துகளையும் உயிலில் குறிப்பிடாவிட்டாலும், அந்த உயிர் செல்லும். ஆனாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதாவது, விடுபட்ட சொத்தை குடும்ப உறுப்பினர்கள் பிரிப்பது எப்படி என்பதில், தேவை இல்லாத பிரச்னை உருவாகலாம். எனவே, உயில் எழுதும் முன், ஒருவர் தனக்கு என்னென்ன சொத்துக்கள், முதலீடுகள் இருக்கின்றன என்பதை பட்டியல் போட்டு வைத்துக் கொள்வது நல்லது.ஒரு உயில் போலியாக உருவாக்கப்பட்டு இருப்பதாக குடும்ப உறுப்பினர்களில் யாராவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிரூபிக்கப்பட்டால், அந்த உயில் செல்லாது. இதேபோல வற்புறுத்தி அல்லது மிரட்டி மோசடியாக எழுதப்பட்ட உயில் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டாலும், அந்த உயில் செல்லாது. அத்துடன், ஒருவருக்கு கடன்கள் இருந்தால், அது எப்படி அடைக்கப்பட வேண்டும் என்பதை உயிலில் குறிப்பிட்டால், குடும்ப உறுப்பினர்கள் இடையே தேவையில்லாத பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கலாம்.