PUBLISHED ON : செப் 07, 2011 12:00 AM

கண்ணே கருவிழியே! கண் மருத்துவர் ராதிகா: மாறிவரும் சூழலுக்கேற்ப கண்களின் பவர் அதிகரிப்பதால், கண்ணாடி அணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கண்ணின் பவர், 0.25 ல் இருந்து, அதிகபட்சம், 30 வரை உள்ளது. மூக்குக் கண்ணாடி இல்லாமல், சிலரால் இயங்க முடியாது. தடிமனான கண்ணாடி பலரின் முகத்தை விவகாரமாக காட்டிவிடும். மற்றவர்களின், கேலி கிண்டல்களுக்கு ஆளாவதைத் தடுக்க, கான்டாக்ட் லென்ஸ், லேசர் சிகிச்சை ஆகியவை கண்ணாடியை மறக்கச் செய்திருக்கிறது.நவீன,'லேசிக்' லேசர் என்ற சிகிச்சை தான் இன்று அனைவருக்கும் எளிதான சிகிச்சையாக மாறியிருக்கிறது. கண்ணின் கருவிழி வழியாக லேசர் கதிர்களைச் செலுத்திக் குணமாக்குவது தான் இதன் சிறப்பு. இதற்கு முன், 'மோட்டரைஸ்டு பிளேடு' மூலம் கண்ணின் கருவிழியை சிறிய செதிலாக கட் செய்யும் முறை இருந்தது. ஆனால், இப்போது, பிளேடிற்கு பதில் லேசரைக் கொண்டு கருவிழி குணமாக்கப்படுகிறது.இந்த சிகிச்சைக்கு வருபவர்கள், 18லிருந்து, 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காரணம், 18 வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சிக்கேற்ப கண்ணாடி பவரில் பார்வையிட்டு, மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 18 முதல், 20 வயதிற்குள் உடல் வளர்ச்சி என்பது நின்று போய், கண் பார்வையின் பவர் நிலையானதாகி விடும். சர்க்கரை நோய், மூட்டு வலி போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சையைச் செய்வது நல்லதல்ல.வலியில்லாமல், அறுவை சிகிச்சை இல்லாமல், செய்யக் கூடிய அற்புதமான முறை இது. இதை செய்த மூன்று நாட்களிலேயே புத்தகம் படிக்கலாம், 'டிவி' பார்க்கலாம். கம்ப்யூட்டரில் வேலை செய்யலாம். ஆனால், முதல் 15 நாட்களுக்கு கண்ணில் ஈரம், தூசி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்நாளில் பெரிய அளவில் அடி ஏதும் படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். இதை செய்து கொண்ட பின் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது.