PUBLISHED ON : செப் 25, 2011 12:00 AM

'வருமானம் இல்லேன்னா என்ன...' வெட்டியான் வேலை பார்க்கும் அன்னம்மாள்: காஞ்சிபுரம் அருகே, வேடல் தான் என் சொந்த ஊர்.
ஆரம்பத்தில், அம்மா வழி தாத்தா தான், ஊரில் உள்ள துக்க காரியங்களை முடித்துக் கொடுப்பார். தாத்தாவிற்கு உதவியாக இருக்கும்படி, அம்மா என்னை அவருடன் அனுப்பி வைப்பார். அப்போது எனக்கு வயது 14. அப்போது, கூலி எதுவும் கிடையாது. நிலத்தில் இருந்து கழனிக்கு ஒரு கட்டு நெல்லும், மற்ற பயிர்களும் கொடுப்பர். கிடைப்பதில் பாதியை விற்று விட்டு, மீதியை சாப்பிட வைத்துக் கொள்வோம்.என் தாத்தாவிற்குப் பின், இந்த வேலையை யாரும் செய்ய முன்வரவில்லை. என் பெற்றோருக்கும், இந்த வேலையை செய்வதில் உடன்பாடில்லை. ஆனால், ஊர்க்காரர்களின் வற்புறுத்தலால், என் அம்மா, வெட்டியான் வேலை செய்தார். அவருக்கும் நான் உதவியாக இருந்தேன். அவருக்குப் பின், நான் செய்ய ஆரம்பித்தேன். கடந்த 20 ஆண்டுகளாக சுடுகாட்டு வாழ்க்கை பழகிவிட்டதால், வேறு வேலைக்குச் செல்ல மனமில்லை. வருமானம் ஒன்றும் சொல்லும்படி இல்லை. எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த வேலையை செய்வதற்கு என் வீட்டில் அதிக எதிர்ப்பு உள்ளது. இந்த வேலையில், எனக்குள்ள ஒரே வருத்தம், ஊரில் துக்க விஷயம் என்றால், உடனே என்னை அழைப்பர், நல்ல விஷயங்களுக்கு அழைப்பதற்கு யோசிப்பர். இதற்கு முன், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஏழு ஊர்களுக்கும், வெட்டியான் வேலை பார்தேன். இப்போது வயதாகிவிட்டதால், இரண்டு ஊர்களை மட்டும் பார்க்கிறேன்.எனக்கு பேய், பூதம் என்று எதிலும் பயம் இல்லை. என் தாத்தா, எனக்கு கொடுத்த தைரியம் தான் இதற்கு காரணம். என் காலம் முடியும் வரை, எனக்கு இந்த தொழில் தான்.
'ஆர்வத்தால் கற்றுக் கொண்டேன்' கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு, கம்ப்யூட்டரில், பவர் பாயின்டில் வடிவமைத்து அசத்தும், நான்காம் வகுப்பு மாணவன் அருண்: நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே, என் அப்பா இறந்து விட்டார். என்னையும், என் அண்ணனையும் என் அம்மா தான், தோல் கம்பெனியில் வேலை பார்த்து படிக்க வைக்கிறார். பள்ளியில், விளையாட்டு வகுப்பு நேரத்தில், மற்ற மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பர். நான் கம்ப்யூட்டர் அறைக்கு வந்துவிடுவேன். அங்கு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் கம்ப்யூட்டர் கற்றுக் கொடுப்பார்.அதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அவர்கள் சென்ற பின், நானே அமர்ந்து டீச்சர் சொல்லிக் கொடுத்ததை செய்து பார்ப்பேன்.எனக்கு ஏற்படும் சந்தேகங்களை, எங்கள் ஆசிரியர் தீர்த்து வைப்பார். முதன் முதலின், நான்காம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ள சில பயிற்சிகளை, சில படங்களை வைத்து பவர் பாயின்டில் செய்து பார்த்தேன். இதை கவனித்த சித்ரா ஆசிரியர், என்னை மேலும் ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து எட்டு, ஒன்பதாம் வகுப்பு பாடப் பயிற்சிகளைக் கூட, பவர் பாயின்டில் உருவாக்கியிருக்கிறேன்.நான் தற்போது, புத்தகத்தைப் படித்து, புரிந்து, தமிழில் டைப் செய்து, போட்டோ எடுத்து, படம் சேர்த்து, ஏற்ற இறக்கத்துடன் குரல் சேர்த்து, முழுமையான பவர் பாயின் டை வடிவமைத்துள்ளேன்.இதைப் பார்த்த, தொடக்கக் கல்வி இயக்குனர் என்னைப் பாராட்டினார். இவை அனைத்தையும், என் ஆர்வத்தால் கற்றுக் கொண்டேன். இந்த துறையில் நான் மேலும் சாதிக்க வேண்டும். என் எதிர்கால லட்சியம் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது தான்.

