/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வளையலுக்கு ஆன்லைன்ல ஆர்டர் வருது!
/
வளையலுக்கு ஆன்லைன்ல ஆர்டர் வருது!
PUBLISHED ON : அக் 07, 2024 12:00 AM

'வளையோசை அம்மாச்சி' என்ற பெயரில், சமூக வலைதளங்களில் கண்ணாடி வளையல்களை விற்பனை செய்து வரும், சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி:
வளையல் தொழிலில் நான் ஐந்தாவது தலைமுறை. சிறு வயதில் என் பாட்டி கூடவே இருந்ததால் வளையல் வாங்குவது, விற்பது, தரம் பார்ப்பது என வளையல் குறித்த அனைத்து விஷயங்களிலும் அப்போதே அத்துப்படி.
திருமணத்திற்கு பின், தாம்பரம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல கடையை வாடகைக்கு எடுத்து, மஞ்சள், குங்குமம், வளையல்களை வித்துட்டு இருக்கேன். 1,000 ரூபாயை கடன் வாங்கி தான் தொழிலை ஆரம்பித்தேன்.
திருமணத்திற்கு வளையல் வாங்குபவரே, சீமந்தத்திற்கும் என்னிடம் வாங்குவர். அடுத்து அவர்களின் குழந்தையை அழைத்து வந்தும் வாங்குவர். அவ்வாறு குழந்தையை அழைத்து வரும் போது, 'அம்மாச்சி' என்றே அறிமுகப்படுத்துவர்.
எனக்கு நான்கு பிள்ளைகள். அவர்களை நல்லா படிக்க வைக்கணும் என்ற வைராக்கியத்துடன், நாலு பேரையும் டிகிரி படிக்க வைத்தோம். இப்போது, அவர்கள் நல்ல இடத்தில் வேலைக்கு போறாங்க. நிறைவாக இருக்கு.
தாம்பரம் மார்க்கெட்டில் சிறு கடையாக தான் வைத்திருந்தோம். அதன்பின் தற்போது வைத்துள்ள கடை, வாடகைக்கு வருது என்று தெரிந்ததால், 10 ஆண்டுகளுக்கு முன், 9,000 ரூபாய் முன்பணம் கொடுத்து ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து, மஞ்சள், குங்குமம், வளையல் விற்றோம்.
அதன்பின் வளையலுக்கு மட்டும் தனி தளத்தை வாடகைக்கு எடுத்தோம். இப்போது குடோன்களும் வாடகைக்கு எடுத்துருக்கோம்.
வளையலை மட்டும் பிரதானமாக விற்பனை செய்ய ஆரம்பித்ததால், ராஜஸ்தான், கோல்கட்டா என வெளிமாநிலங்களிலிருந்தும் வளையல்களை இறக்குமதி செய்கிறோம். வெளிமாநில வளையல் வரத்து அதிகமானதால் வாடிக்கையாளர்கள் அதிகமாகினர்.
எனக்கு தற்போது, 50 வயதாகிறது. 'இந்த வயதில் எதுக்கு இந்த வீடியோ'ன்னு கேட்போரும் இருக்கின்றனர். என் தங்கை ஒரு யு டியூபர். நான், அவங்க வீட்டுக்கு ஒருமுறை சென்ற போது, என்னை ஒரு வீடியோ எடுத்தாங்க. அந்த வீடியோ சமூக வலைதளங்களில், 3 மில்லியன் வியூஸ் போச்சுன்னு சொன்னாங்க.
அதனால் எனக்கும் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. என் பிள்ளைகளிடம் கூறியபோது, அவர்கள் கற்றுக் கொடுத்தனர். வளையல், 'ஸ்டாக்' வந்ததும், சமூக வலைதளங்களில், 'லைவ்' போட்டு, 'ஆர்டர்'கள் எடுக்க ஆரம்பிப்பேன். எதையும், 'எடிட்' செய்ய மாட்டோம்.
நான் இயல்பாக பேசுவதை மக்கள் ரசித்தனர். வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்த பின் சிங்கப்பூர், மலேஷியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். நான், உழைப்பை நம்புகிறேன். அது, எனக்கான இடத்தை உருவாக்கி கொடுத்துள்ளது!