/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வாய்ப்பு நம்மை தேடி வராது; நாம்தான் தேடிப் போகணும்!
/
வாய்ப்பு நம்மை தேடி வராது; நாம்தான் தேடிப் போகணும்!
வாய்ப்பு நம்மை தேடி வராது; நாம்தான் தேடிப் போகணும்!
வாய்ப்பு நம்மை தேடி வராது; நாம்தான் தேடிப் போகணும்!
PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

திண்டிவனம் நேரு வீதியில் உள்ள, 'பிஸ்மி புட்ஸ்' கடை உரிமையாளர், 'காளான் பாய்' அக்பர்: ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டினேன்; வருமானம் இல்லை. 'காளான் 65' போட்டு விற்கலாம் என்று, தள்ளுவண்டியில் தான் கடையை துவக்கினேன்.
முதல் நாள் 50 ரூபாய் வருமானம் கிடைத்தது. சிறப்பாக, தரமாக செய்தால் இதில் லாபம் பார்க்கலாம் என்று தோன்றியது.
அந்த நேரத்தில், காளான் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும், காளானுடைய ஊட்டச்சத்துகள் குறித்தும் மக்களிடம் அதிகம் பேச்சு வர, என் கடையில் விற்பனை அதிகமாக ஆரம்பித்தது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். காளான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்களுக்கும் சென்று, அது குறித்தும் அதிகமாக தெரிந்து கொண்டேன். பல இடங்களுக்கு சென்று காளான் ஸ்டாலும் அமைத்தேன்.
'காளான் 65, மஷ்ரூம் சூப்' இது இரண்டும் தான் எங்கள் கடையின் ஸ்பெஷல். வாடிக்கையாளர்களுக்கு காளானை வைத்து என்னென்ன சமையல் செய்யலாம் என்று செய்முறை குறிப்புகளை, 'பிரின்ட் அவுட்' எடுத்துக் கொடுக்கிறேன்.
நாங்கள் கடையை திறக்க தாமதமானால், எங்கள் வாடிக்கையாளர்கள் போன் செய்து விடுவர்.
தற்போது கடையில், 'காளான் ரைஸ், நுாடுல்ஸ், மஞ்சூரியன், பிரெஞ்ச் பிரைஸ், பேபிகார்ன்' உள்ளிட்ட உணவு வகைகள் அனைத்தையும் நானே தயாரிக்கிறேன். ஐந்து பேர் வேலை பார்க்கின்றனர்.
வீட்டு விசேஷங்களுக்கும் செய்து கொடுக்கிறேன். என் கடைக்கென, ஒரு பெயர் எடுத்து வைத்துள்ளேன்; அதை காப்பாற்றினாலே போதும் என்று நினைக்கிறேன்.
காளான், மாவு பதம், ருசி என அனைத்தையும் பார்த்து பார்த்து தான் செய்கிறேன். ஒரு நாளைக்கு, 15,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது.
செலவெல்லாம் போக நிறைவான லாபம் வருகிறது. நான் பட்ட கஷ்டங்கள், என் மகன்களுக்கு வேண்டாம் என்று நன்கு படிக்க வைக்கிறேன்.
மேலும், பட்டன் காளான், சிப்பி காளான், பால் காளான் என, வீட்டிலேயே வளர்த்து விற்பனை செய்கிறேன். 200 கிராம் பாக்கெட் காளானை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
ஒரு நாளைக்கு, சராசரியாக 160 பாக்கெட்கள் விற்பனை ஆகும். இதன் வாயிலாக, 8,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது.
'வேலை இல்லை, பிழைக்க வழி இல்லை'ன்னு இங்கு நொந்து கொள்வோர் பலர் உள்ளனர். ஆனால், அது உண்மை யில்லை. வாய்ப்பு நம்மை தேடி வராது. நாம்தான் அதை தேடிப் போக வேண்டும். இதை புரிந்து கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.