/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கை விவசாயத்தில் லாபம் அதிகம்!
/
இயற்கை விவசாயத்தில் லாபம் அதிகம்!
PUBLISHED ON : ஜூலை 07, 2025 12:00 AM

விருதுநகர் மாவட்டம், மத்தியசேனை அருகே உள்ள காரிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி: அப்பா விவசாயி. ரசாயன உரங்கள் பயன்படுத்தி தான் அவர் விவசாயம் செய்து வந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரங்களில் பெற்றோருடன் விவசாய வேலைகள் பார்ப்பேன்.
கணவர் குடும்பத்திற்கும் விவசாயம் தான் முதன்மையான வாழ்வாதாரம். ரசாயன இடுபொருட்கள் பயன் படுத்தி தான் சிறுதானியங்கள், நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வந்தனர். நானும் அதையே தான் கடைப்பிடித்தேன்.
இந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன், சிவகாசி வட்டத்தில், தேன்கனி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்குகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில், இயற்கை விவசாயம் செய்த விவசாயிகள் பகிர்ந்த கருத்துகள், என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
ஆனால், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் வெற்றிகரமாக விளைச்சல் எடுப்பது எந்தளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
முன்னோடி இயற்கை விவசாயி ஒருவர், தன் அனுபவம் வாயிலாக அளித்த விளக்கம் நம்பிக்கையை கொடுத்தது.
அதனால், இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் என்று முடிவெடுத்து, முதற்கட்ட சோதனை முயற்சியாக, 50 சென்ட் பரப்பில் கம்பும், 10 சென்ட் பரப்பில் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய் மற்றும் அவரை சாகுபடி செய்தேன்.
நான் எதிர்பார்த்ததை விட நல்ல விளைச்சல் கிடைத்தது. காய்கறிகள் மிகவும் சுவையாக இருந்தன; கம்பு திரட்சியாக இருந்தது.
முதல் முயற்சியிலேயே வெற்றிகரமான விளைச்சல் கிடைத்ததால், எங்கள் குடும்பத்தில் உள்ளோருக்கு இயற்கை விவசாயத்தில் முழு நம்பிக்கை வந்தது. 3.5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தோம்.
ஒன்றரை ஏக்கரில் குதிரைவாலி தானியத்தை பயிர் செய்தோம். 2 ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்தோம்.
இந்தாண்டு, 2,000 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கான பணிகளை இனி துவங்க இருக்கிறேன். குதிரைவாலியை அறுவடை செய்து, அதை அப்படியே விற்பனை செய்தால், 1 கிலோவுக்கு குறைந்தபட்சம், 45 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 52 ரூபாய் தான் விலை கிடைக்கும்.
விதையாக விற்பனை செய்தால், 1 கிலோவுக்கு, 80 ரூபாய் விலை கிடைக்கிறது. குதிரைவாலியை அரிசியாக மதிப்பு கூட்டும் போது, கிலோவுக்கு, 130 ரூபாய் கிடைக்கும்.
ஆக, சிறுதானியங்கள் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள், மதிப்பு கூட்டலில் இறங்கினால் தான், உழைப்புக்கேற்ற லாபம் பார்க்க முடியும்!
தொடர்புக்கு
96554 37242