/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எங்கள் பண்ணையில் பல பயிர்களால் லாபம்!
/
எங்கள் பண்ணையில் பல பயிர்களால் லாபம்!
PUBLISHED ON : டிச 09, 2025 03:18 AM

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில், முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருபவரும், அஸ்வகந்தா மூலிகை பயிரில் புதிய ரகங்களை கண்டுபிடித்ததற்காக, 'சிறந்த வேளாண் விஞ்ஞானி' விருது பெற்றவருமான, முனைவர் மணிவேல்: மதுரை மாவட்டம், மங்கம்மாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவன் நான். சிறு வயதில் இருந்தே, விவசாயத்தில் ஈடுபாடு அதிகம்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பட்டப்படிப்பும், பிஹெச்.டி., எனும் முனைவர் படிப்பும் முடித்தேன்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானியாக, 25 ஆண்டுகள் வேலை பார்த்தேன். தற்போது, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரில் செயல்படும் தேசிய வணிக வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின், முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவராக பணியாற்றி வருகிறேன்.
விடுமுறை நாட்களில், என் சொந்த ஊரில், 16 ஏக்கரில் அமைந்துள்ள எங்கள் பண்ணைக்கு வந்து, விவசாய பணிகளை கவனிப்பேன்.
இங்கு, இயற்கை விவசாய முறையில், 9 ஏக்கரில் மா சாகுபடி வாயிலாக, ஆண்டுக்கு, 9 லட்சம் ரூபாயும், 1 ஏக்கரில் கொய்யா சாகுபடி வாயிலாக, 1.30 லட்சம் ரூபாயும் லாபம் கிடைக்கிறது.
கொய்யா மரங்களின் தேவையற்ற கிளைகளை வெட்டி கிடைக்கும் இலைகளை மதிப்பு கூட்டி, 1 கிலோ உலர் இலை, 200 ரூபாய்க்கும், 1 கிலோ கொய்யா இலை பவுடர், 400 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம்.
கொய்யா மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக தண்ணீர்விட்டான் கிழங்கை பயிரிட்டு, அதன் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. கிழங்குகளை பதப்படுத்தி, பவுடராக்கி, கிலோ, 400 - 600 ரூபாய்க்கு விற்கிறோம். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தண்ணீர்விட்டான் கிழங்குக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதே போல, ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த அஸ்வகந்தா மூலிகையை, 2 ஏக்கரில் பயிர் செய்கிறோம். அதன் வேர் மற்றும் விதைகள் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
பலவிதமான காய்கறிகள், கீரை வகைகள், சிறு தானியங்கள், லெமன் கிராஸ், வெட்டிவேர் உள்ளிட்ட பயிர்களை, 2 ஏக்கரில் சாகுபடி செய்ததில், ஆண்டுக்கு, 1.5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
இவ்வாறு, எங்கள் பண்ணையில் பயிர்கள் மற்றும் மூலிகை சாகுபடி வாயிலாக, ஆண்டுக்கு, 18.30 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
'வேளாண் விஞ்ஞானி' என பெருமையாக சொல்லிக் கொண்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் மட்டும் போதாது; நிலத்தில் இறங்கி, விவசாயியாகவும் நேரடி அனுபவம் பெறுவது அவசியம்!
தொடர்புக்கு: 88389 07148

