PUBLISHED ON : ஜூலை 15, 2026 12:00 AM

மருத்துவராக இருந்தபடியே, 'கேக்' தயாரிப்பு தொழிலிலும் அசத்தும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.வித்யா:
சிறு வயது முதலே கேக் செய்வதில் ஆர்வம் அதிகம். எம்.பி.பி.எஸ்., படித்து முடித்ததும், மருத்துவராக என் பணிகளை தொடர்ந்தேன். அதே நேரம், 'பேக்கிங்' எனும் கேக் செய்யும் ஆசையை துாக்கி போடவும் விருப்பம் இல்லை.
அது, முதல் காதல் போல என்பதால், ஏதேனும் செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன். அப்படித்தான், 'டாக்டர் பேக்கர்' என்ற நிறுவனம் உருவானது.
ஆயினும், 'ஒரு மருத்துவருக்கு இது தேவையில்லாத வேலை என்று கூறியவர்களே அதிகம். இப்போது நான் இரண்டையும் வெற்றிகரமாக சமாளிப்பதால், அந்த பேச்சுகள் குறைந்திருக்கின்றன. நம் வெற்றி தான், விமர்சனங்களுக்கான சிறந்த பதில் என்று நம்புகிறேன்.
என் சிறிய மருத்துவமனை போலவே, பேக்கரியும் எனக்கு பிடித்தமான இடம் என்பதால், இந்த வெற்றி சாத்தியமானது. பேக்கரி முன்னேற்றத்தில் கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகளும் எனக்கு உற்சாகத்தை கொடுக்கின்றன. மருத்துவப் பணி சவாலானது. நோயாளிகள் உயிருடனும், ஆரோக்கியத்துடனும் போராடும் பொறுப்பான அந்த பணிக்கு பின், நான் பேக்கிங் செய்வதற்கு ஆர்வமும், பிடித்ததை செய்ய வேண்டும் என்ற தீவிர விருப்பமும் தான் காரணம்.
எனக்கு இரு குழந்தைகள். பல நேரங்களில் குழந்தைகள் துாங்கிய பின் தான், கேக் ஆர்டர்களை தயாரிக்க ஆரம்பிப்பேன். இரவு முழுதும் விழித்திருந்து கேக் செய்து முடித்து விட்டு, மறுநாள் காலை மீண்டும் பொறுப்பான மருத்துவராக வேலைக்கு செல்வது சாதாரண விஷயமல்ல.
ஒவ்வொரு கேக் தயாரிப்பிலும் என் கற்பனை திறனும், அர்ப்பணிப்பும் அப்பட்டமாக வெளிப்படும்; அதை நானே ரசிக்கிறேன். அதனால் தான் குடும்பம், குழந்தைகள், மருத்துவமனை என்று ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாத வாழ்க்கையிலும், என் கனவுகளுக்கான நேரத்தை சுயமாக உருவாக்கி கொள்ள முடிகிறது. தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருப்பதால், என் மருத்துவப் பணிகளிலும் உற்சாகமாக இயங்க முடிகிறது.
வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான ஒரு கேக்கை வடிவமைத்த பின் ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. அதை வாடிக்கையாளர்களே நன்றியுடன் பாராட்டும்போது கிடைக்கும் திருப்தி, விலை மதிப்பற்றது. நம் விருப்பம், மற்றவர்களை பாதிக்காது என்றால், அதை தைரியமாகவே செய்யலாம்.
கேக்குகள் மட்டுமல்லாமல் சுப நிகழ்ச்சிகளுக்கான தாம்பூல பரிசு, வண்ண பூங்கொத்துகள் போன்றவற்றையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, தனித்துவமாக வடிவமைத்து விற்பனை செய்கிறேன்.
