தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பனை பாரம்பரியம் மட்டுமல்ல நம் அடையாளம்!

 பனை பாரம்பரியம் மட்டுமல்ல நம் அடையாளம்!

 பனை பாரம்பரியம் மட்டுமல்ல நம் அடையாளம்!


PUBLISHED ON : பிப் 18, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2026 02:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டல் செய்து, 'சூர்யா ஆர்கானிக்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்து வரும், ராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த, 34 வயதான ஜெயபிரியா: என் சொந்த ஊர் இதுதான்; மிகவும் வறட்சியான ஊர். வெயிலையும், ஓங்கி வளர்ந்த பனை மரங்களையும் தவிர எதுவும் தெரியாத மக்கள் நிறைந்த இடம்.

நாங்கள் பனையேறி குடும்பம். 15 ஏக்கர் பனந்தோப்பில் கிடைத்த பனை ஓலைகள், பதநீர், நுங்குகளை விற்று வந்தோம்; பெரிய வருமானம் இருக்காது.

போதுமான வருமானம் இல்லாததால், பலரும் பனந்தோப்பை விற்க ஆரம்பித்தனர். பனையேறிகளும் வெவ்வேறு தொழிலுக்கு செல்ல ஆரம்பித்தனர். பனை மரத்தை, 'பூலோகத்தின் கற்பகதரு' என அழைப்பர். வேரில் இருந்து இலை வரை எல்லாமே பலன் தரக்கூடியது.

ஜனவரி - மார்ச் வரை பனங்கிழங்கு; ஏப்ரல் - ஜூலை வரை பதநீர், நுங்கு; ஆகஸ்ட் - டிசம்பர் வரை பனம்பழம் என, ஆண்டு முழுதும் பனை மரத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருள் கிடைக்கும்.

அப்படி கிடைக்கும் பொருட்களை என்ன செய்வது என்று யோசித்த போது, மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தோம் .

முதலில், பனங்கிழங்குகளை வேக வைத்து, துண்டாக்கி காய வைத்து பொடியாக்கினோம். அந்த பொடியை பாலில் கலந்து குடிக்கும்போது சுவை நன்றாக இருந்தது. அதனால், பனங்கிழங்கு பால் அறிமுகம் செய்தோம். அடுத்த ஆண்டு பனங்கிழங்கின் குருத்து பொடி தயார் செய்தோம்.

அதன்பின் நுங்கு பால், நுங்கு ஜூஸ், பனங்கிழங்கு அல்வா, மிட்டாய் என ஒவ்வொரு பொருளாக அடுத்தடுத்த ஆண்டு களில் அறிமுகம் செய்தோம். தொழில் துவங்கிய இந்த, 10 ஆண்டுகளில், 20 வகையான பனை மதிப்பு கூட்டல் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம்.

தற்போது, சாத்தான்குளத்தில் தான் எங்கள் கடை இயங்குகிறது. வியாபாரத்தை வெவ்வேறு ஊர்களில் விரிவுபடுத்த போதுமான வசதியில்லை. அதனால், 'ரெடி மிக்ஸ்' தயார் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.

இப்போது எங்களுடைய பொருட்களை தமிழகம் முழுதும் விற்பனை செய்கிறோம். எதிர்காலத்தில் இணைய வர்த்தகம் ஆரம்பிக்கும் யோசனையும் இருக்கிறது.

ஆரம்பத்தில் ஆண்டுக்கு, 50,000 ரூபாய் வருமானம் பார்த்த நாங்கள், இப்போது ஒரு சீசனுக்கு, 5 லட்சம் ரூபாய் வர்த்தகம் செய்கிறோம்; அதில், 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.

நிறைய பனை விவசாயிகள் எங்களுடன் இணைந்து, மதிப்பு கூட்டல் முயற்சிகளை செய்ய ஆரம்பித்து உள்ளனர்.

பனை நம் பாரம்பரியம் மட்டுமல்ல; அடையாளம். முன்னோர் நட்ட பனை, இனி எங்கள் பேரப் பிள்ளைகளின் பசியையும் போக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தொடர்புக்கு

63858 08799

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us