PUBLISHED ON : ஏப் 05, 2023 12:00 AM

கடந்த 65 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும், திண்டுக்கல் தங்கமணி மிட்டாய் கடையின் உரிமையாளர் சிவகுமார்: எங்கள் தாத்தா சண்முக வடிவேல், திண்டுக்கல்லில், ௫ ஏக்கர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்து வந்துள்ளார்.
அப்போது, நிலக்கடலைக்கு போதிய விலை கிடைக்காததால், அதை பயன்படுத்தி மிட்டாய் தயாரித்து விற்பனை செய்ய தீர்மானித்துஉள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வெல்லம் வாங்கி வந்து, பாகு தயாரித்து, அதனுடன் நிலக்கடலையை சேர்த்து, மாமர பலகையில் காய வைத்து கடலை மிட்டாய் தயாரித்துள்ளார். அப்படி, 1958ல், சிறிய அளவில் துவக்கப்பட்டதே எங்களின் கடை.
இதையடுத்து, மாட்டு வண்டியில் கடலை மிட்டாய்களை எடுத்துக் கொண்டு திருவிழாக்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சந்தைகள் என, மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று விற்பனை செய்துள்ளார் தாத்தா. அப்படித்தான், எங்களுக்கு வாடிக்கையாளர்கள் உருவாகினர்.
எங்களின் முன்னோர் எங்களுக்கு கற்றுக் கொடுத்தபடி, விலை கூடுதலாக இருந்தாலும், தற்போது, கர்நாடகாவில் இருந்து தரமான நிலக்கடலை வாங்குகிறோம்.
தமிழகத்தில் காவிரி படுகையில் இருந்து கிடைக்கும் வெல்லத்தை வாங்குகிறோம். சில நேரங்களில், மூலப்பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவும் கொள்முதல் செய்கிறோம்.
உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி, அனைத்தையும் முறையாக பயன்படுத்துகிறோம். நாள் ஒன்றுக்கு, 500 கிலோ கடலை மிட்டாய் தயாரிக்கிறோம்.
எங்கள் தயாரிப்பு கடலை மிட்டாய், தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
மேலும், சிங்கப்பூர், மலேஷியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். 'ஆன்லைனிலும்' மிட்டாயை விற்க ஏற்பாடு செய்துள்ளோம்.
கடலை மிட்டாய் மட்டுமல்லாது, தேங்காய் மிட்டாய், எள்ளு உருண்டை, இஞ்சி முரப்பா, மசாலா பொரி, தொக்கு உருண்டை, கமர்கட்டு, நிலக்கடலை புட்டு போன்ற மிட்டாய் வகைகளையும் தயாரித்து, 20 முதல் 200 ரூபாய் வரையிலான விலைக்கு விற்கிறோம்.
எங்கள் தயாரிப்புகளை, எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக, திண்டுக்கல்லில் உள்ள சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 20 கடைகளில், வார இறுதி நாட்களில், 500 குழந்தைகளுக்கு இலவசமாக கடலை மிட்டாய்கள் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
கடலை மிட்டாயை சாப்பிடுவதன் வாயிலாக நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உட்பட, 21 வகையான சத்துக்கள் கிடைக்கின்றன.
