/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
42 ஆண்டு கால உழைப்புக்கு மக்கள் தந்த அங்கீகாரம்!
/
42 ஆண்டு கால உழைப்புக்கு மக்கள் தந்த அங்கீகாரம்!
PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

புதுச்சேரியில் செயல்பட்டு வரும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடசுப்ரமணியன்:
மதுரை மாவட்டம், செட்டிப்பட்டு கிராமம் தான் எங்களுக்கு பூர்வீகம். 1983ல் எங்களை அழைத்துக் கொண்டு புதுச்சேரிக்கு வந்து விட்டார் அப்பா. அதே ஆண்டு பாரதி வீதி பிளாட்பாரத்தில், சிறிய டீக்கடை ஒன்றை ஆரம்பித்தார். அத்துடன் வடை, போண்டா, பஜ்ஜி போன்றவற்றையும் செய்து விற்க ஆரம்பித்தார்.
தரமாக கொடுத்ததால், வெகு விரைவிலேயே மக்களின் வரவேற்பு கிடைத்தது. அடுத்து மிக்சர், காராசேவு போன்றவற்றையும் சேர்த்தார். சில வாடிக்கையாளர்கள், 'இனிப்பு வகைகளை வாங்குவதற்கு வேறு கடைகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது; அதையும் நீங்களே செய்தால் நன்றாக இருக்கும்' என்று கேட்க, அப்பா அதையும் பட்டியலில் சேர்த்தார்.
கடந்த 2002ல் நான் பட்டப்படிப்பு முடித்து விட்டு, பிசினசிற்குள் வந்ததும், இரண்டு விஷயங்களை தான் முதலில் செய்தேன்.
ஒன்று வாடிக்கையாளர்களை அணுகுவது குறித்தும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஊழியர்களிடம் ஒரு வரையறையை ஏற்படுத்தினேன்.
மற்றொன்று, அனைத்து வரவு - செலவு கணக்குகளையும் முறைப்படுத்தி, வெளிப்படை தன்மையை கொண்டு வந்தேன். அதுவரை தென்மாநில இனிப்புகள் மட்டுமே எங்கள் கடையில் இருந்தன. புதிய மாஸ்டர்களை வரவழைத்து, காஜு ஸ்வீட்ஸ், பெங்காலி ஸ்வீட்ஸ் என, பல வகைகளை அறிமுகப்படுத்தினேன்.
நான் தொழிலுக்கு வருகிறேன் என்று கூறியதும், அப்பா கடைக்கு அருகில் இருந்த இடத்தையும் வாங்கினார்; அதனால், கடையை சிறிது விரிவுபடுத்த முடிந்தது.
அப்பா துவங்கிய பாரதி வீதி பிளாட்பார கடை, இன்று அதே இடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் ஆக வளர்ந்து நிற்கிறது. புதுச்சேரியில் நம்பர் ஒன் ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ் கடையாக வளர வேண்டும் என்று நினைத்தேன். இன்று, அனைத்து கிளைகளையும் சேர்த்து என்னிடம், 200 பேர் பணிபுரிகின்றனர்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரத்துடன், நம்பிக்கையையும் வழங்குவதை கடமையாக நினைக்கிறோம். ஏனெனில், வாடிக்கையாளர்கள் தான் முதலாளிகள் என்பதை எப்போதும் மறப்பதில்லை.
இன்றும் புதுச்சேரியில் நடைபெறும் பெரும்பாலான இல்ல நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் எங்களின் தயாரிப்புகள் தான் பெரும்பாலும் இருக்கும். எங்களின், 42 ஆண்டு கால உண்மையான உழைப்புக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம் இது!