PUBLISHED ON : ஜன 13, 2025 12:00 AM

தமிழக போலீசின் முதல் நிலை காவலரும், போலீஸ் ஜீப் ஓட்டும், பெண் டிரைவருமான, விருதுநகர் மாவட்டம் சாத்துார் தாலுகா, ஏழாயிரம்பண்ணை அருகே, கொம்மங்கியாரம் என்ற கிராமத்தை சேர்ந்த ரேணுகா: விருதுநகர் மாவட்டத்தில், போலீஸ் ஜீப் ஓட்டும் பெண் டிரைவரான நான், என் வீட்டில் முதல் பட்டதாரி.
டிகிரி முடித்ததும், ஒரு ஆர்வத்துல, 'டிரைவிங்' கத்துக்கிட்டேன். கார் வச்சிருந்த எங்க உறவினர்கள், எங்கேயாச்சும் போகணும்னா கார் ஓட்ட என்னை கூப்பிடுவாங்க.
போலீஸ்காரங்க மேல இருந்த மரியாதையால், சின்ன வயசுல இருந்தே போலீசாகணும் என்ற ஆசை. அதற்கான பயிற்சிகளை எடுத்தேன். அப்பா சப்போர்ட் பண்ணினாலும், அம்மாவுக்கு சுத்தமா பிடிக்கல.
நான் பிடிவாதம் பிடிக்க, என்னமோ பண்ணுன்னு விட்டுட்டாங்க. செலக் ஷன்ல கலந்துக்கிட்டு, 'பர்ஸ்ட் அட்டெம்ட்'லயே பாஸ் பண்ணேன். சென்னையில் முதல் போஸ்டிங்.
முதன்முதலா காக்கி யூனிபார்ம் போட்டப்ப, நினைச்சதை செஞ்சு காட்டிட்டோம்னு ஒரே சந்தோஷம். முதல் மாசம் சம்பளம் வாங்கினப்போ, இனி நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துச் சுன்னு, மனசு முழுக்க நம்பிக்கை வந்துடுச்சு.
என் முதல் தம்பியை ஐ.டி.ஐ.,யும், இரண்டாவது தம்பியை எம்.டெக்.,க்கும் படிக்க வைத்தேன். அப்புறம் தான் எங்களை எல்லாம் மத்தவங்க மதிச்சாங்க.
'சம்பாதிக்கிறது எல்லாம் வீட்டுக்கே செய்யாமல் சேர்த்து வைத்து கல்யாணம் பண்ணிக்க'ன்னு சிலர் சொன்னாங்க. முதல் கடமை, என் வீட்டை ஒழுங்குபடுத்துவது; அப்புறம் எனக்குங்கிற முடிவுல இருந்தேன்.
மாப்பிள்ளை பார்த்தாங்க... 'ராணுவத்திலையோ, வெளிநாட்டிலையோ வேலை பார்க்கிறவராகவும், நேரம் காலம் பார்க்காத போலீஸ் வேலையில் இருக்கிற சிரமங்களால, கல்யாணத் துக்கு அப்புறம் அவரவர் சம்பளத்திற்கு உரிய பொறுப்புகளை புரிஞ்சிக்கிறவராகவும் இருக்கணும்னு சொன்னேன்.
'எங்களுக்குள்ள பிரச்னை வராமல் இருக்க, இப்படியான ஆளா இருந்தா சரியா இருக்கும்'னு சொன்னேன். வந்தவங்க எல்லாரும் போலீஸ் பொண்ணு வேணாம்னு போய்ட்டாங்க. ஆனா, காத்திருந்ததுக்கு பலனா, என்ன புரிஞ்சுகிட்ட மாப்பிள்ளை அமைந்தார். அவர், துபாயில் வேலை பார்க்கிறார்.
இப்பவும், என் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எங்கம்மா வீட்டுக்கு கொடுக்கிறேன். இப்படி எல்லா வகையிலும் எனக்கு இந்த வாழ்க்கையை இலகுவாக்கி கொடுக்கிற ஒரு, 'மேஜிக்' என் வேலை தான்.
நலிவடைஞ்ச குடும்பத்தில், ஒரு பொண்ணுக்கு கிடைக்கிற வேலையும், சம்பளமும் அந்த வீட்டுக்குள்ள என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும்ங்கிறதுக்கு, நான் உதாரணம்.
எங்க ஊர்ல ஸ்கூல், காலேஜ் படிக்கிற தங்கச்சிங்க எல்லாம் என்கிட்ட வந்து, 'அக்கா உங்கள மாதிரி போலீஸ் ஆகணும்னா, என்னக்கா செய்யணும்'னு கேட்கும்போது அவங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியா இருக்கிறது நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கும். வழிகாட்டல், பொருளுதவின்னு என்னால என்ன முடியுமோ, அதை அவங்களுக்கு செய்கிறேன்!