/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பகலில் மனநல மருத்துவர் இரவில் புடவை வடிவமைப்பாளர்!
/
பகலில் மனநல மருத்துவர் இரவில் புடவை வடிவமைப்பாளர்!
பகலில் மனநல மருத்துவர் இரவில் புடவை வடிவமைப்பாளர்!
பகலில் மனநல மருத்துவர் இரவில் புடவை வடிவமைப்பாளர்!
PUBLISHED ON : நவ 19, 2025 12:00 AM

மரத்தட்டில் செதுக்கப்பட்ட வடிவங்களை புடவையில் அச்சிட்டு தரும், 'பிளாக் பிரின்டிங்' தொழிலில் ஈடுபட்டுள்ள சென்னை அடையாறைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுஜாதா வேல்முருகன்: திருச்சியில் இருந்தபோது, 'பிளாக் பிரின்டிங்' குறித்த ஒருநாள் பயிற்சியில் பங்கேற்றேன். நேரம் கிடைக்கும்போது, ஆடைகளில் அச்சிட்டு பார்ப்பேன்.
கடந்த, 2007ல் திருமணம் முடிந்து, அமெரிக்கா சென்று விட்டேன். அங்கு மருத்துவராக பயிற்சி செய்வதற்கு தேர்வுகள் எழுதி, உரிமம் எடுக்க வேண்டியிருந்தது.
அதன் வழிமுறைகள் மிகவும் கடினமாக இருந்ததால், சற்றே இளைப்பாற வீட்டிலேயே சிறு அளவில் பிளாக் பிரின்டிங் செய்து, நண்பர்களுக்கு பரிசளித்தேன். யாராவது அச்சிட்டு தர சொன்னாலும் செய்து கொடுத்தேன்.
கடந்த, 2016ல் சென்னை வந்து விட்டோம். மருத்துவப் பணிகளுக்கு இடையில், முறையாக ஒருவரிடம் பிளாக் பிரின்டிங் கற்றுக் கொண்டேன். நெசவாளர்களை சந்தித்து, அச்சிடப்படாத பருத்தி புடவைகளை வாங்க ஆரம்பித்தேன்.
ஆந்திராவில் உள்ள ஒரு கலைஞர், என் வடிவமைப்புகளை மரத்தில் செதுக்கி, அச்சாக தயாரித்து கொடுத்தார். 2017ல், 'நிலா பை சுஜா' என்ற பெயரில், துணிகளில் அச்சு செய்யும் பட்டறையை துவக்கினேன்.
புடவைகளில் செய்யும் வடிவமைப்புகளுக்கு பின்னால், ஒரு செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இது மாதிரியான விஷயங்களை செய்வதால், நான் சமூகத்தை மாற்றப் போகிறேன் என்று அர்த்தம் கிடையாது. என் கதையை, என் போக்கில் சொல்வதற்கான ஒரு வழியாக இதை பார்க்கிறேன்.
அது, சமூகத்தில் சின்ன தாக்கத்தை ஏற்படுத்தினால் கூட, சந்தோஷம் தான். புதிய வகையான புடவைகளை அறிமுகம் செய்யும்போதே, அது குறித்த விபரங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்.
ஆரம்பத்தில், பருத்தி புடவைகளில் மட்டுமே அச்சிட்டு வந்தேன். இப்போது, 'லினன்' புடவைகளிலும் அச்சிடுகிறேன். தெரிந்தவர்கள், நண்பர்கள் நேரில் வந்து வாங்கி செல்வர்.
சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விற்பனை செய்கிறேன். நான் பகலில் மனநல மருத்துவர்; இரவில் புடவை வடிவமைப்பாளர் என்றே சொல்வேன்.
இன்னும் புது வடிவமைப்புகளை உருவாக்கி, புது வகையான புடவைகளுடன் ஒரு கடை துவங்கும் ஆசை இருக்கிறது. என் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் வடிவமைக்கிறேன்.
இன்று பிரபலமாக உள்ள வடிவமைப்பின் பின்னாடி போக ஆரம்பித்தால், என் படைப்பாற்றல் பாதிக்கப்படும் என்று நினைக்கிறேன். என்னுடைய தனித்தன்மையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

