/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
என் வேலையை திருப்தியாக செய்வதே வெற்றிக்கு காரணம்!
/
என் வேலையை திருப்தியாக செய்வதே வெற்றிக்கு காரணம்!
PUBLISHED ON : பிப் 21, 2024 12:00 AM

'பம்ப் செட் ஷோரூம்கள், சானிட்டரிவேர், பிரின்ஸ் கிச்சன் சிங்க்' கம்பெனி என ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நேபாள்ராஜ்:
பூர்வீகம், ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி கிராமம். என் அப்பா ஓலைப்பாய் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான், 10ம் வகுப்பு வரை படித்தேன்.
பிசினஸ் ஆசையில், துாத்துக்குடியில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தேன். வேலையில் என் ஈடுபாட்டை பார்த்து, 'கேஷியர்' பொறுப்பை ஒப்படைத்தனர்.
நாகர்கோவிலுக்கு, 1972ல் வந்தேன். மாமாவும், நானும் சேர்ந்து 15,000 ரூபாய் முதலீட்டில், சிறிய கட்டுமான பொருட்கள் விற்கும் கடை ஒன்றை துவங்கினோம்.
காலை, 6:00 மணிக்கே கடைக்கு சென்று பணியை துவங்கி விடுவேன். வீடு கட்டும் இடங்களுக்கு சென்று, உரிமையாளர் யார், ஒப்பந்ததாரர் யார் என தெரிந்து பிசினஸ் பேசுவேன்.
இதனால், அந்த ஆண்டே, 3 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' ஆனது. அதன்பின் கன்னியாகுமரி மற்றும் இலங்கையிலும் நிறுவனத்தை துவக்கினேன்.
தற்போது ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும் அளவுக்கு பிசினஸ் வளர்ந்துள்ளது.
ஆரம்பத்தில், 50 ரூபாயில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்த என்னிடம், தற்போது, 300 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.
நான் பிசினசை கஷ்டப்பட்டு செய்ய வில்லை; இஷ்டப்பட்டு செய்கிறேன். நாம் எந்த இலக்கில் செல்கிறோமோ, அதில் உற்சாகமாக பயணிக்க வேண்டும்.
எந்த தொழிலாக இருந்தாலும், அதை முழுமையாக தெரிந்து இறங்க வேண்டும். கொள்முதல் செய்வது முதல் சேல்ஸ் வரை அனைத்தும் தெரிய வேண்டும்.
அதுபோல், வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதிலும் மனதிற்கு திருப்தி கிடைக்கிறது.
தரம், விலை, வாடிக்கையாளர் சேவை இந்த மூன்றிலும் எந்தத் தவறும் நடக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.
எப்போதுமே தொழிலில் நம்மை வெளிப்படுத்த கூடாது; நம்முடைய புராடக்டையும், சர்வீசையும் தான் வெளிப்படுத்த வேண்டும்.
ரீடெயில் பிசினஸ், கஸ்டமர் சர்வீஸ் தான் என்னை கைதுாக்கி விட்டது. பில்டிங் மெட்டீரியல் விற்பனையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து இருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
பிசினசை சேவையாக செய்யும்போது, வெற்றி விரைவாக கிடைக்கும். விற்பனைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதுபோல, விற்பனைக்கு பிந்தைய சர்வீசுக்கும் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம்.
என் வெற்றிக்கு காரணம், என் வேலையை திருப்திகரமாக செய்து கொண்டிருப்பது தான்.

