தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பாரம்பரிய கயிற்று கட்டில் வாங்கலாமா!

 பாரம்பரிய கயிற்று கட்டில் வாங்கலாமா!

 பாரம்பரிய கயிற்று கட்டில் வாங்கலாமா!


PUBLISHED ON : மார் 15, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரம்பரிய கயிற்று கட்டில் உள்ளிட்ட அறைகலன்களை தயாரிக்கும், 'இழையம்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சென்னை, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த, 34 வயதான சூர்யா: மென்பொருள் நிறுவனம் ஒன்றில், வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தேன். கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலை இழப்பு, பாதி சம்பளம் என்ற அசாதாரண சூழ்நிலையை உலகம் எதிர்கொண்டது. அந்த சிக்கலுக்கு நானும் ஆளானேன்.

பாரம்பரிய முறையிலான தொழில் குறித்து யோசித்த போது, என் தாத்தா நினைவுக்கு வந்தார். அவருக்கென வீட்டில் ஒரு கயிற்று கட்டில் இருக்கும். 'நல்ல துாக்கம் வரும். முதுகுவலி இருக்காது; உடல் சூடு குறையும்' என்று அடிக்கடி கூறுவார்.

எங்கு விற்பனையாகிறது என விசாரிக்கையில், கயிற்று கட்டில் பரவலாக கிடைப்பது இல்லை என்பது தெரிந்தது.

சமூக வலைதளத்தில், அது குறித்து தேடியபோது வெளிநாடுகளில், 1.50 லட்சம் ரூபாய் வரை கயிற்று கட்டில் விற்பனையாவது தெரிந்தது. நம் ஊரில் சாதாரணமாக நினைக்கும் கட்டிலின் விலை, 1.50 லட்சமா என்று வியப்பாக இருந்தது.

கயிற்று கட்டில் பின்னுவது எப்படி என்பதை, சமூக வலைதளம் வாயிலாக கற்றுக்கொண்டேன். பயிற்சி செய்ய, சின்னதாக மரச்சட்டம் வாங்கினேன். அதற்கேற்ப கயிறும் வாங்கி, பின்னி பழகினேன்.

சிறிய மாதிரி கட்டில் தயாரிப்பு நம்பிக்கை கொடுத்தது. இனி, இதை வியாபாரமாக மாற்றலாம் என்று முடிவு எடுத்தேன். தேங்காய் நார், பிளாஸ்டிக் கயிறு தவிர்த்து, பருத்தி நுாலிழையில் பின்ன வேண்டும் என்று விரும்பினேன்.

வீட்டின் மொட்டை மாடியிலேயே தேவையான பொருட்கள் வாங்கி பின்னி, என் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டேன்; நல்ல வரவேற்பு கிடைத்தது.

வீடு தேடி வந்து பலரும் வாங்கி சென்றனர். சிலர், தங்கள் வீட்டிலிருக்கும் பழைய கட்டிலுக்கு கயிறு பின்னி கொடுங்கள் என்றும் கேட்கத் துவங்கினர். அப்படித்தான் கயிற்று கட்டில் யோசனை வெற்றி பெற்றது.

வீட்டுக்கு சென்று பின்னிக் கொடுத்தால், 1,500 ரூபாய் வாங்கினேன். இதையே பெரிய வணிகமாக மாற்ற வேண்டும் என்றபோது, குடும்பத்தினர் உதவினர். கணவரும், தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் இணைந்தார்.

நாற்காலி, உணவு மேஜை, அலுவலகத்தில் அதிகாரிகள் பயன்படுத்தும் நாற்காலி, ஊஞ்சல், சாய்வு நாற்காலி என்று பலவற்றையும் தயாரித்தோம்.

இதற்காக, தரமான மரங்களாக தேர்வு செய்து, வெளி மாநிலங்களில் இருந்து வரவழைத்தோம். நான் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இப்போது பலன் கிடைத்திருக்கிறது.

உலகளவில் எந்த நாடுகளுக்கு சென்றாலும், என் தயாரிப்பு கிடைக்க வேண்டும். அதற்காக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்!

தொடர்புக்கு

88256 03528

நம் உளி கல்லுக்கு உயிர் கொடுக்கும்!

கடந்த 2024ம் ஆண்டின் சிறந்த கற்சிற்ப கலைஞருக்கான தே சிய விருதை, ஜனாதிபதி கையால் வாங்கியிருக்கும், சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன்:

தஞ்சாவூர் பக்கமுள்ள அம்மாபேட்டை தான் என் சொந்த ஊர். அப்பா நெசவுத் தொழிலாளி. 1979ல், மாமல்லபுரம் சிற்ப கல்லுாரியில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன்; அதில் கற்சிற்ப பிரிவை தேர்ந்தெடுத்தேன். ஐந்தாண்டு படிப்பு அது.

சிற்பக்கலையில் ஒன்றிவிட்டேன். கல்லுக்கு உணர்ச்சி இல்லை என்று கூறுவர். ஆனால் நம் உளி, கல்லுக்கு உயிர் கொடுக்கும். டிப்ளமோ முடித்த உடனேயே லண்டனில் ஒரு கோவிலில் சிற்ப வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

ஆறு மாதங்கள் அங்கு தங்கி, அந்த வேலையை முடித்து கொடுத்து, மீண்டும் மாமல்லபுரம் சிற்பக் கல்லுாரிக்கு வந்து பட்டப்படிப்பு படித்தேன்.

அது முடித்ததும், அதே கல்லுாரியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்தேன். அந்த நேரம் அயர்லாந்தில் இருந்து, பவுத்த குரு ஒருவர் மாமல்லபுரத்திற்கு வந்து, 'அயர்லாந்தில் ஒரு சிற்ப பூங்காவில் வைப்பதற்கு, வாழ்க்கையின் தத்துவங்களை விளக்குவது மாதிரியான சிற்பங்கள் வேண்டும்' என்று கேட்டார்.

அது எனக்கு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதால், ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, பிறப்பில் ஆரம்பித்து இறப்பு வரைக்குமான நிகழ்வுகளை மையமாக வைத்து, 7 அடியில் ஆரம்பித்து, 10 அடி வரை, 14 சிற்பங்கள் செய்தேன்; அவற்றை செய்ய, 16 ஆண்டுகள் முழுமையாக எடுத்துக் கொண்டேன்.

வேறு எந்த வேலையும் செய்யவில்லை. முப்பரிமாணத்தில் செய்யப்பட்ட அந்த சிற்பங்களை, என் கலைத்திறனின் சிறந்த சிற்பங்கள் என்று சொல்லலாம்.

அது முடிந்ததும், சிங்கப்பூரில், 'மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிங்கப்பூர்' என்ற நிறுவனம், அதன் முகப்பில் நிறுத்துவது மாதிரி, உலகின், 10 முக்கிய சிந்தனையாளர்கள் சிற்பங்களை கேட்டது; அதில் நம் திருவள்ளுவரும் ஒருவர்.

அந்த வேலை முடிய இரண்டு ஆண்டுகள் ஆனது. அதன்பின், சென்னை சவீதா மருத்துவ கல்லுாரி முகப்பில் வைக்க, 40 அடி உயரத்துக்கு ஒரே கல்லில் முருகன் சிலை செய்து தந்தேன்.

உலக கலை மரபுகளு டன் ஒப்பிடும்போது, நமக்கு மிகப்பெரிய பாரம்பரியமும் பெருமையும் இருக்கிறது. 1,000 ஆண்டுகளுக்கு முன், நம் சிற்பிகள் படைப்புத் திறனோடு கல்லிலும், உலோகங்களிலும் சிற்பங்களை உருவாக்கி இருக்கின்றனர். நம் ப டைப்புகளை பார்த்து, சர்வதேச கலைஞர்கள் அனைவரும் வியக்கின்றனர்.

ஆனால், கலைஞர்களுக்கு இன்னும் நாம் முறையான அங்கீகாரம் கொடுப்பதில்லை; அந்த நிலை மாற வேண்டும். அப்போது தான் பலரும் சிற்ப கலையை கற்பதில் ஆர்வம் காட்டுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us