
'மீனவ பெண்களின்வாழ்க்கைத்தரம் உயரபாடுபடுவேன்!'
'சிகரம்' தொண்டு நிறுவனத்தின் மூலம், மீனவ பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபடும் பரமேஸ்வரி: என் சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள இரணியல்.
சமூக சேவையில் கொண்ட தணியாத ஆர்வத்தால், பி.ஏ., சோஷியாலஜி படித்தேன். படித்து முடித்தவுடன் திருமணம், பின் இரு குழந்தைகள் என, வாழ்க்கை சுகமாக சென்றது.சமூக சேவையின் பக்கம் என் வாழ்க்கை திரும்பிய தருணம் அன்று தான் டிசம்பர் 26, 2004.
உலகையே சுருட்டிய சுனாமி வந்த நாள். அனைத்தையும் இழந்து, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கும் மீனவ மக்களை பார்த்த போது, மனதில் தாங்க முடியாத பாரம் ஏற்பட்டது. என் தோழிகள், கணவரின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, உணவு பொருட்கள், துணி என முடிந்ததை வாங்கி கொடுத்தோம்.இருந்தாலும், அவர்களின் நிச்சயமற்ற வாழ்க்கை முறை குறித்து கவலை ஏற்பட்டது. இதன் காரணமாக உருவானது தான், 'சிகரம்' தொண்டு நிறுவனம். எங்கள் நிறுவனத்தின் மூலம், 750க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களை துவக்கினோம். பேங்க் அக்கவுன்ட், இன்சூரன்ஸ் போன்றவற்றை கட்டாயமாக்கினோம்.
சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்.மீனவ பெண்கள் மட்டுமே உள்ள குழுக்களுக்கு மீன் ஊறுகாய், ஐஸ் மீன் பதப்படுத்துதல் போன்றவற்றை குடிசை தொழில்களாக செய்ய கற்றுக் கொடுத்தோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, 'தாட்கோ' உதவியோடு பசுமாடு வாங்கி கொடுத்தோம். தற்போது, பெண்களே நடத்தும் கார்மென்ட்ஸ் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.இந்த ஆர்வமும், அக்கறையும் தான் எனக்கு,'சேவாரத்தினம், கோல்ட் ஸ்டார் மில்லினியம், உழைப்பால் உயர்ந்தவர்' என, பல விருதுகளும் பெற வைத்தது.

