PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM

கடந்த, 15 ஆண்டுகளாக, கோவில்களில் கோலம் போட்டு வரும், மீனா சிதம்பரம்: காரைக்குடி அடுத்த புதுவயல் தான் என் சொந்த ஊர். திருமணமாகி மதுரையில் செட்டிலான பின், மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும்போது, அங்கே போடப்பட்டிருக்கும் விதவிதமான கோலங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன்.
கடந்த, 2008ல், நவராத்திரிக்கு சில தினங்களுக்கு முன், ஏறத்தாழ, 20 பெண்கள் வரை ஆலயத்தின் பல பகுதிகளில் அமர்ந்து, கண்ணைக் கவரும் வண்ணங்களில், 'பெயின்ட்டால்'
கோலமிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த, 84 வயது, 'சீனியரான' லீலா வெங்கட்ராமன் என்பவரை சந்தித்து, என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவரும் கோலம் போடும் நுட்பங்களை சொல்லிக் கொடுத்து, மீனாட்சி அம்மன் கோவிலில் கோலமிட வாய்ப்பளித்தார். அன்று முதல் கடந்த, 15 ஆண்டுகளாக, எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக கோலமிட்டு வருகிறேன்.
கோலத்தில், 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, கடந்த, 1979ல் முனைவர் பட்டம் பெற்ற, 'கோல வித்தகர்' சாவி தம்பிராசு என்பவர், ஒரு முறை மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள ஜலந்தீஸ்வரர் சன்னிதியில், கோலம் போடுவது பற்றி சொல்லிக் கொடுத்தார்.
நானும் அந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். 5 புள்ளி 5 வரிசை நேர் புள்ளியில் மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கோல வகைகள் உள்ளதாகக் கூறி, அதை அந்த ஆண்டு, கார்த்திகை மாதத்தில், 5 நாட்கள் போடச் சொல்லிக் கொடுத்தார்.
அந்த நுணுக்கங்களை கோலம் போடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், கோவிலுக்கு வரும் பெண்களுக்கும் சொல்லி தருகிறேன்.
ஆஸ்திரேலியாவில் ஒரு பள்ளியில் கோலத்தை வைத்து கணக்குப் பாடத்தை குழுந்தைகளுக்குச் சொல்லித் தருகின்றனர் என்பது, நமக்கெல்லாம் பெருமைத் தரக்கூடிய விஷயம்.
மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமல்லாமல், திருப்பதி முதல் திருச்செந்துார் வரை, 3,000த்துக்கும் மேற்பட்ட கோவில்களில் நாங்கள் குழுவாக சென்று கோலம் போட்டு வருகிறோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு லட்சம் புள்ளிகளைக் கொண்ட கோலத்தை இரண்டு முறை போடும் வாய்ப்பும் எங்களுக்கு
கிடைத்தது.
ஆயக்கலைகள், 64ல் இதுவும் ஒன்று. கோலம் போடுவதை எவ்வித எதிர்பார்ப்புமின்றி, முழு அர்ப்பணிப்போடு தெய்வ கைங்கரியமாக செய்கிறோம். இதன் வாயிலாக அனைவரும் நன்மை அடையலாம், அடைந்துள்ளோம்.
நாங்கள் கோலம் போடுவதை புண்ணியமாக நினைக்கிறோம். கோலம் போடுவதன் வாயிலாக, நம் மனதிலுள்ள பாரங்கள் குறைந்து, மன அழுத்தம் வெளியேறுகிறது. கோலம் போடுவதை கடவுள் எங்களுக்குக் கொடுத்த வாய்ப்பாகவே கருதுகிறோம்!