/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கொட்டாங்குச்சி கைவினை பொருளில் ரூ.4 லட்சம் லாபம்!
/
கொட்டாங்குச்சி கைவினை பொருளில் ரூ.4 லட்சம் லாபம்!
PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM

கொட்டாங்குச்சியில் கைவினைப் பொருட்கள் தயார் செய்து, விற்பனை செய்து வரும் நெல்லையை சேர்ந்த ஆனந்த பெருமாள்:
எனக்கு மதுரை தான் சொந்த ஊர். பி.பி.ஏ., முடித்தேன். நெருக்கடியான நகர்ப்புறத்தில் இயந்திரத்தனமான வாழ்க்கையில் சலிப்பு தட்டவே, இயற்கை சார்ந்த இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன்.
கைவினைப் பொருட்களை தயாரிப்பதில் முன் அனுபவம் இருந்ததால், கொட்டாங்குச்சியை சுத்தப்படுத்தி, அதில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன்.
கிண்ணம், உண்டியல், பூ ஜாடி, பேனா ஸ்டாண்டு, அலங்கார விளக்கு குடுவை, கலப்பை, மரம், செடி, கொடிகள், விலங்குகள், மனித உருவங்கள் உட்பட பல வித சிற்பங்களை செதுக்கி விற்பனை செய்ய ஆரம்பித்தேன்; இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.
உணவுத் திருவிழா, விதைத் திருவிழா, அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நடத்தக்கூடிய வேளாண் கண்காட்சிகளிலும் ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்கிறேன்.
பாரம்பரிய உணவகம் நடத்துவோர் கிண்ணம், கரண்டி வாங்குகின்றனர். நட்சத்திர ஹோட்டல்களில் என் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாகவும் தயாரிப்புகளை விற்பனை செய்கிறேன்.
திருமண மேடைகளை அலங்கரிப்பதற்கான கலை பொருட்களையும், கொட்டாங்குச்சியில் செய்து தருகிறேன்.
தேங்காய்களை உடைத்து அதில் உள்ள சதைப் பகுதியை, ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து விடுவேன்.
கொட்டாங்குச்சிகளை இரண்டு நாட்கள் தண்ணீரில் ஊற வைத்தால், தண்ணீரை உள்வாங்கி ஓடுகள் உறுதியாகும்.
அதன்பின், நிழலில் போட்டு ஒருநாள் முழுதும் உலர வைப்பேன். பின், நார்களை மிஷின் வாயிலாக நீக்கி சுத்தப்படுத்துவேன். சில உபகரணங்களை பயன்படுத்தி, தேவையான பொருட்களை உருவாக்குவேன்.
கொட்டாங்குச்சி கைவினைப் பொருட்கள் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு, 4.80 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
விற்பனையாகாமல் தேக்கம் அடையக்கூடிய தேங்காய் சில்லுகளை கொப்பரையாக மாற்றி, எண்ணெய் ஆட்டி, விற்பனை செய்வேன். அதன் வாயிலாக, ஆண்டுக்கு 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இந்த தொழில் வாயிலாக, ஆண்டுக்கு 5.40 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
இந்த தொழிலில் பலர் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே ஒரு பொது நோக்கத்துடன் இதுவரை, 1,000க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
தொடர்புக்கு:
94434 44478.