/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்!
/
இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்!
PUBLISHED ON : ஜன 30, 2024 12:00 AM

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் வசித்து வரும், தமிழகத்தைச் சேர்ந்த ரகுநாதன்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தான் பூர்வீகம். 80 ஆண்டுகளுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால், என் முன்னோர், கேரளாவில் குடியேறினர். இங்கு தண்ணீர் வளம் நன்றாக இருக்கும்.
கிட்டத்தட்ட, 20 ஏக்கர் நிலம் இருக்கு. எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், இளங்கலை தாவரவியல் பட்டப் படிப்பு முடித்ததுமே விவசாயத்தில் இறங்கிவிட்டேன். அப்போதெல்லாம் அரசு வேலை எளிதாக கிடைக்கும்; ஆனால், அதை நான் விரும்பவில்லை.
ஜாதிக்காய் மரங்களிலிருந்து இந்த ஆண்டு, 400 கிலோ காய்கள் மகசூல் கிடைத்தது. கிலோ, 450 ரூபாய் என விற்பனை செய்ததன் வாயிலாக, 1.8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
ஜாதிக்காய் மரங்களின் பூக்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. கிலோவுக்கு சராசரியாக, 2,000 ரூபாய் விலை கிடைக்கிறது. 100 கிலோ ஜாதிக்காய் பூக்கள் விற்பனை செய்ததன் வாயிலாக, 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
இந்தத் தோட்டத்தில், 3,000 பாக்கு மரங்கள் உள்ளன. சராசரியாக, 8 கிலோ வீதம் மொத்தம், 2,400 கிலோ காய்கள் மகசூல் கிடைத்தது. கிலோ, 42 ரூபாய் என விற்பனை செய்தததன் வாயிலாக, 1.01 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
மொத்தம், 1,200 தென்னை மரங்களிலிருந்து காய்கள் அறுவடை செய்து விற்பனை செய்கிறேன். 1.8 லட்சம் காய்கள் விற்பனை செய்ததன் வாயிலாக, ஒரு காய்க்கு சராசரியாக, 10 ரூபாய் வீதம் மொத்தம், 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
தென்னை, ஜாதிக்காய், பாக்கு மரங்கள் வாயிலாக, இந்த ஆண்டு மொத்தம், 28 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் எல்லாச் செலவுகளும் போக, 22 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது.
கேரளா அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விருது வழங்கி வருகிறது. நீண்ட காலமாக இயற்கை விவசாயம் செய்து வரும் மாநிலத்தின், 'சிறந்த தென்னை விவசாயி' என்ற பிரிவில், 2 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை மற்றும் விருது வழங்கி கவுரவித்தனர்.
இயற்கை விவசாயத்தில் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைவு; உற்பத்திச் செலவும் குறைகிறது.
இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும், அருமையையும் உணர்ந்து என் மகன் ஐ.டி. வேலையை விட்டு விவசாயத்துக்கு வந்துவிட்டார். என் மருமகள், பேரன் அனைவரும் இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம். அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தை நோக்கி வர வேண்டும்.
தொடர்புக்கு: 98469 44310