PUBLISHED ON : ஜன 22, 2024 12:00 AM

திருப்பூர், பெருமாநல்லுாருக்கு அருகிலுள்ள, தோட்டத்துப்பாளையம் என்ற சிற்றுாரில், திருநங்கைகளின் கைமணத்தில் சிறுதானிய இனிப்புகள் தயாராகின்றன. இந்தக் குழுவின் தலைவியான திருநங்கை திவ்யா:
சொந்த ஊர் ராமேஸ்வரம்; எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். அப்போது உடலளவிலும், மனதளவிலும் ஏற்பட்ட மாறுதலால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
என்னால் என் குடும்பத்தார் அவமானப்படக் கூடாது என்று எண்ணியே வெளியேறினேன்.
ஆரம்ப காலத்தில் யாசகம் பெற்று பிழைக்க வேண்டிய அவல நிலை தான் எனக்கிருந்தது. ஒரு கட்டத்தில், திருப்பூருக்கு வந்து சேர்ந்தேன்.
அங்கு இருந்த திருநங்கையர் சிலரிடம் என் நிலையை எடுத்துக் கூறினேன்; அவர்கள் தான் அடைக்கலம் கொடுத்தனர்.
வீடுகளில் குழுவாகச் சென்று, 'டோலக்'கைத் தட்டி, ஆடிப் பாடி ஆசீர்வாதம் செய்வது, திருஷ்டி சுற்றிப் போடுவதன் வாயிலாக கிடைக்கும் தொகையை வைத்தும், யாசகம் பெற்றும் வாழ்க்கையை ஓட்டி வந்தேன்.
ஆனால், 'இது நமக்கான விதி அல்ல... நாமும் கவுரவமான தொழில் எதையாவது செய்து கண்ணியமாக வாழ வேண்டும்' என விரும்பினேன். ஆனால், 'திருநங்கை' என்ற ஒரே காரணத்துக்காக வேலைகொடுக்க எவரும் முன்வரவில்லை.
நாங்கள், 20 பேர் கொண்ட ஒரு குழுவாகச் சேர்ந்து, சிறுதானியங்களில் தின்பண்டங்கள் செய்ய துவங்கினோம். ஆனால், அவற்றை விற்பனை செய்வதற்கு கடைக்காரர்கள் முன்வரவில்லை.
வீட்டிலேயே தயாரித்து, தெருத் தெருவாகச் சென்று விற்க முடிவு செய்தோம். ஆனால், எங்களுக்கு வீடு கிடைப்பதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
மிகுந்த சிரமத்துக்கு இடையே வீடு கிடைத்தது. வீடு வீடாகச் சென்று விற்றோம்; அதில் ஓரளவு வருமானம் கிடைத்தது. அதன் பின், திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பல சந்தைகளுக்கும் சென்று, எங்கள் தயாரிப்புகளை விற்க துவங்கினோம்; அதிக வருமானம் கிடைத்தது.
தின்பண்டங்களை தயாரிப்பது முதல், அவற்றை விற்பனை செய்வது வரை, அனைத்து வேலைகளையும் நாங்களே பிரித்து செய்தோம்.
தங்கமணி என்ற சமூக ஆர்வலர், சலுகை விலையில் மாதந்தோறும் எங்கள் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களை அனுப்பி வைக்கிறார்.
இப்போது வருமானத்துக்கு யார் கையையும் எதிர்பார்க்காமல் வீட்டிலேயே தயாரித்து, சிறப்பாக வியாபாரம் செய்து, தலை நிமிர்ந்து வாழ்கிறோம்.
'வந்தாள் மகராசி' என்ற பெயரில், 'யூடியுப்' சமூக வலைதளத்தில், 'சேனல்' ஒன்றையும் நடத்தி வருகிறோம்.
படித்த திருநங்கையருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்து விடுகின்றன.
ஆனால், படிக்காத திருநங்கையரும் வாழ்வதற்கு அரசு உரிய வழிவகை செய்ய வேண்டும்!