PUBLISHED ON : ஜூலை 24, 2011 12:00 AM

செல்லப்பிராணிகளின்பிரியர்...! செல்லப் பிராணிகளிடம் மிகுந்த அன்பு காட்டும் பீட்டர்: நான் சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறேன்.
பத்தாவது படிக்கும் போது, ரோட்டில் அழகான நாய்க் குட்டிகளைப் பார்த்தால், ஆசையில் உடனே வீட்டுக்கு தூக்கிட்டு வந்துடுவேன்.அதில் ஒரு நாய், 'ரேபிஸ்' நோயால் இறந்து விட்டது. ரோட்டில் இருந்தாலாவது உயிரோடு இருக்குமோன்னு நினைத்துப் பார்த்து தூக்கம், சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டேன்.பிராணிகளை எப்படி வளர்க்கணும்னு தெரிஞ்சுக்க முடிவு பண்ணினேன். 2002ல், 'பிரின்டிங் பிரஸ்' வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், பிராணிகளை வளர்க்கத் துவங்கினேன். நாய்களுக்கான பயிற்சியாளர்கள், பிராணிகள் நல மருத்துவர்களின் ஆலோசனைகள், பிராணிகள் வளர்ப்பு தொடர்பான புத்தகங்கள் என, தேடி அலைந்து கண்டுபிடித்து தகவல்கள் சேகரித்த பிறகே, இதில் இறங்கினேன்.
இன்று, நாய், புறா, கிளி, குருவி என, ஏகப்பட்ட செல்லப் பிராணிகளால் வீடே நிறைந்துள்ளது. இப்போது என்னிடம், தெரு நாய் முதல் உயர்தர நாய் வரை, 25 ரகங்கள் உள்ளன.அதே போல், 20 ரக பந்தய புறாக்களை வளர்த்து வருகிறேன். சென்னையில் இருந்து டில்லி வரை பறந்து சென்று, மறுபடியும் வீடு திரும்பக் கூடிய பந்தயப் புறாக்கள் என்னிடம் உள்ளன; 'ஆப்ரிக்கா லவ் பேர்ட்ஸ்' தொடங்கி, கிளிகளும், குருவிகளும் வளர்க்கிறேன்.ஒருமுறை நான் பக்கவாதத்தால் அவதிப்பட்டேன். வைத்தியம் பார்க்க சென்ற போது, 'புறாக் கறி சாப்பிடுங்க சரியாயிடும்'ன்னு சொன்னாங்க... 'நான் வளர்க்கும் புறாவை நானே சாப்பிடுவதா'ன்னு போன வேகத்துல வந்துட்டேன்.இன்று மனிதர்களைக் காட்டிலும், இவை தான் எனக்கு செல்லம்!
நூலகக் காவலன்!காஞ்சிபுரம் நேரு நூலகத்தின் நூலகர் ரகுராமன்: என் சொந்த ஊர் வாலாஜாபாத். அப்பா தீவிர திராவிட உணர்வாளர். புத்தகம் தான் என் முதல் மனைவி என்ற, அவருடைய வாசிப்புப் பழக்கம் என்னையும் தொற்றிக் கொண்டது. நூலகர் கோர்ஸ் முடித்ததும், அரசுப் பணியில் சேர்ந்தேன். பத்தோடு பதினொன்றாக இருக்க எனக்கு விருப்பமில்லை. படிப்பது ஓர் சுகமான அனுபவம்.ஆனால், அரசு நூலகங்களில் அதற்கான வசதிகள் இல்லாததால், அதை சகித்துக் கொள்ளவும் மனம் இல்லை. 'இது தேவை' என்று அரசுக்கு மனு அனுப்பி விட்டு காத்திருக்கவும் விருப்பம் இல்லை. அதனால் ஓரளவு வசதி படைத்த வாசகர்களை சந்தித்து, 'அறிவைப் பரப்பும் நூலகம் எல்லா வசதிகளுடன் இருந்தால் எப்படி இருக்கும்' என்ற என் விருப்பத்தை அவர்களிடம் கூறினேன்.காஞ்சி நகர சேர்மன் ராஜேந்திரன், நகராட்சி மூலம் நிதி ஒதுக்க முடியாத நிலையை விளக்கி, தனது சொந்தப் பணத்தில் இருந்து, 27 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.
பாரதிதாசன் பள்ளித் தாளாளர் என் மீது நம்பிக்கை வைத்து, தன் பெற்றோர் பெயரிலான, 'மனோகரி மணி' அறக்கட்டளை மூலம் பழுதடைந்திருந்த நூலகத்தை தத்தெடுத்து, 2 லட்சம் ரூபாய் செலவில் கட்டட புதுப்பித்தல் மற்றும் கழிப்பறை, மின்சார வசதிகளுக்கான வேலைகள் நடைபெறுகின்றன. குடிநீருக்கு என அரசு நிர்ணயித்த 5 கேன்கள் போதாததால், போலீஸ் அதிகாரி ஒருவர், போதுமான குடிநீர் வசதியை வழங்க ஒப்புக்கொண்டார். இப்படி, பல நல்ல உள்ளம் படைத்தவர்களினால் இந்த நூலகத்தை சிறப்பாக நடத்த முடிகிறது. இதற்கு முன், 47 ஆண்டுகளாக இந்த நூலகத்தில் இணைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,500 பேர். நான் பணியில் சேர்ந்த ஒரு வருடத்தில், 5,300 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும். அனைவருக்கும் வாசிப்புப் பழக்கம் வர வேண்டும்!

