/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
படிப்பும் உழைப்பும் பண்பை கற்று தரும்!
/
படிப்பும் உழைப்பும் பண்பை கற்று தரும்!
PUBLISHED ON : மார் 13, 2024 12:00 AM

திருப்பத்துார் மாவட்டம், இருணாப்பட்டு என்ற ஊரின் அருகிலுள்ள திரு.வி.க., நகர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் - வனிதா தம்பதி:
வனிதா: நாங்கள் இருவரும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள். காதல் திருமணத்தால் உறவுகளின் அன்பை இழந்தவர்கள், சிறுவயதில் எங்களுக்கு சரிவரக் கிடைக்காத கல்வியை மற்றவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வழங்குவதை சமூகப் பணியாக செய்து வருகிறோம்.
என் கணவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். விடுதியில் வளர்ந்த எனக்கு, சொந்தபந்தம் யாருமில்லாததால், எதிர்காலம் என்னாகுமோ என்ற தவிப்பில் இருந்தேன். அப்போது தான் இவரது நட்பு கிடைத்தது.
சென்னை, கே.கே.நகரில் இருக்கும் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, நோயாளிகளுக்கு சுய முன்னேற்றத்துக்கான பயிற்சிகள் கொடுக்கப்படும். அங்கே, கணினி பயிற்சியாளராக இவரும், டெய்லரிங் பயிற்சியாளராக நானும் பகுதி நேரமாக வேலை செய்தோம்; எங்க நட்பு, நாளடைவில் காதலாச்சு.
என் உடல்நிலைக்கு குழந்தை பெற்றுக் கொள்வது கஷ்டம் என சொல்லப்பட்ட நிலையிலும், எங்கள் மகன் லஷ்மண் நல்லபடியாக பிறந்தான். காலிபர் பயன்படுத்தி நடப்பேன். என் கணவர், காலில் கையை ஊன்றி நடப்பார்; நிற்கிறதும், நடக்கிறதும் எங்களுக்கு சிரமம்.
அதனால், பெரும்பாலான வீட்டு வேலைகளையும், கல்லுாரியில் படிக்கும் எங்கள் மகன் தான் செய்கிறான். சமையல், துணி துவைக்கிறதுன்னு அவனுக்கு என் கணவரும் கூடுமான வரை உதவி செய்வார். எதிர்காலம் தெரியாமல் இருந்த எனக்கு, இப்படியொரு குடும்ப வாழ்க்கை அமையும் என கனவிலும் நினைக்கலை.
ரமேஷ்: எங்களுக்கு சொந்த ஊர் சென்னை தான். எங்கள் காதல் என் வீட்டுக்கு தெரிந்து பெரிய பிரச்னையானது. எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டோம். இந்த ஊரில் குடிவந்து, இளைஞர்களுக்கு கணினி பயிற்சியுடன், குழந்தைகளுக்கு கட்டணமில்லாமல் டியூஷன் எடுத்தோம். கூட்டாஞ்சோறு செய்ற மாதிரி, கிராம மக்கள் தங்களால் இயன்ற அளவுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்களை சேகரித்துக் கொடுத்து, எங்கள் பசியை போக்கினர்.
படிப்பும், உழைப்பும் தான் சுயமரியாதையுடன் வாழும் பண்பை கற்றுக் கொடுக்கும். அதற்காக, எங்களால் இயன்றதை கல்வியின் வழியே விதைக்கிறோம். அதுக்குப் பலனாக, 'நாங்கள் அனைவருமே உங்கள் சொந்தம் தான்' என்று, கிராம மக்களும் எங்கள் மேல அளவு கடந்த அன்பு காட்டுகின்றனர். இதனால், கடைசி வரை இங்கேயே வாழலாம் என்று முடிவெடுத்து விட்டோம்.

