தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'ரூ.100ல் துவக்கப்பட்ட கைவினை தொழில் மாதம் ரூ.50,000 வருமானம் தருகிறது!'

 'ரூ.100ல் துவக்கப்பட்ட கைவினை தொழில் மாதம் ரூ.50,000 வருமானம் தருகிறது!'

 'ரூ.100ல் துவக்கப்பட்ட கைவினை தொழில் மாதம் ரூ.50,000 வருமானம் தருகிறது!'


PUBLISHED ON : ஆக 24, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2026 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி மாவட்டம், கொண்டா நகரத்தைச் சேர்ந்த, கைவினை கலைஞர் செண்பகப்பிரியா:

சிறு வயது முதலே, கைவினை பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போதே, விதவிதமான கைவினை பொருட்கள் தயார் செய்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுவேன்.

விளையாட்டுத்தனமான அந்த ஆர்வமே, வருங்காலத்தில் தொழிலாக மாறும் என அப்போது நினைக்கவில்லை.

கல்லுாரியில் இறுதியாண்டு படித்தபோது, 100 ரூபாய் முதலீட்டில் இந்த தொழிலை துவக்கினேன். ஒரு பொருளை அழகாக, நேர்த்தியாகச் செய்வது எப்படி என்று மட்டும் தான் தெரியும்; அதை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்ப்பது, எப்படி விற்பது என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

வீட்டிலும் ஆரம்பத்தில் ஒத்துழைப்பு இல்லை. ஆனாலும், எனக்கு நானே தைரியம் சொல்லி, வியாபார நுணுக்கங்களை ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டேன்.

சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், வாடிக்கையாளரிடம் தயாரிப்புகள் குறித்து எப்படி விளக்க வேண்டும் என்பதை, அனுபவ பாடங்கள் வாயிலாக புரிந்து கொண்டேன்.

'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதளத்தில், 'ஹேண்ட்மேடு வித் லவ்' என்ற பெயரில் பக்கம் ஒன்றை துவக்கி, நான் தயாரித்த பொருட்களை புகைப்படம் எடுத்து, தொடர்ந்து பதிவிட ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக, 'ஆர்டர்'கள் வர ஆரம்பித்தன.

அதன்பின், வீட்டில் உள்ளோருக்கு என் மீதும், என் தொழில் மீதும் நம்பிக்கை வர ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் அக்கம் பக்கத்தில் இருப்போர், உறவினர்கள் வாயிலாகத் தான் ஆர்டர்கள் வந்தன. ஆனால், இப்போது பல மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. 30,000 ரூபாய்க்கு கூட மொத்தமாக ஆர்டர் வருகிறது.

அடுத்து, கைவினை பொருட்கள் தயாரிக்க விரும்புவோருக்கு வகுப்புகள் நடத்தும் எண்ணமும் இருக்கிறது. நான் கற்றுக் கொண்ட விஷயங்களை, இன்னும் பல பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்து, அவர்களும் சொந்தமாக தொழில் துவங்க உதவ வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

இப்போது மாதத்திற்கு, 100 ஆர்டர்கள் வரை வருகின்றன. இதன் மூலம் சராசரியாக 50,000 ரூபாய் வருமானம் வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us