PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

கடந்த, 12 ஆண்டுகளாக அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளியான, சேலத்தை சேர்ந்த திவ்யா: நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே அப்பா இறந்து விட்டார். அம்மா, பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து என்னை படிக்க வைத்தார். சிறு வயது முதலே படிப்பு மேல் அதீத ஆர்வம்.
பார்வைத்திறன் குறைபாடு இருந்ததால், எங்கே படிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயம் இருந்தது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்டில் பள்ளி படிப்பும், சேலம் சாரதா கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலமும் படித்து முடித்தேன்.
ஆசிரியர் பாடம் எடுப்பதை, 'டேப் ரெக்கார்டரில்' பதிவு செய்து, வீட்டில் வந்து அதை கேட்டு எழுதுவேன். நண்பர்கள், பேராசிரியர்கள் உதவியுடன், முதல் வகுப்பில் இளங்கலை படித்து முடித்தேன்.
ஆனாலும், என் பார்வை குறைபாட்டை சொல்லி, பல கல்லுாரிகள் எனக்கு ஆசிரியர் படிப்பில் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் சாரதா கல்லுாரியிலேயே பி.எட்., படித்து முடித்தேன்.
ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, மாநில அளவில் 60வது இடம் பிடித்து, ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். அதன்பின், தொலைதுார கல்வி வாயிலாக முதுகலை மற்றும் எம்.பில்., படிப்பை முடித்தேன்.
தொழில்நுட்ப உதவியுடன், படங்கள், காணொளிகள் வாயிலாக பாடங்களை சொல்லித் தர ஆரம்பித்தேன்.
செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ., மூலம் நான் பேசுவதை அப்படியே டைப் செய்து, வகுப்பெடுக்க ஆரம்பித்தேன். என் வகுப்பை மாணவர்களும் விரும்ப ஆரம்பித்தனர்.
இப்போது எல்லாம் மாணவர்களே போட்டி போட்டு, என் கைகளை பிடித்து பள்ளிக்குள் அழைத்து செல்கின்றனர். பள்ளி வளாகத்தில் தான், அவர்களுக்கு நான் ஆசிரியை; பள்ளிக்கு வெளியே வந்துவிட்டால், மாணவர்களுக்கு நான், திவ்யா அக்கா!
என்னை பொறுத்தவரை மாற்றுத்திறன் உள்ளவர்கள், சாதாரண மனிதர் களை விட, இரண்டு மடங்கு திறன்களை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்; கடினமாக உழைக்க வேண்டும்.
அதேபோல, பெற்றோரும் மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளை, மற்றவர்களை சார்ந்து வாழாமல், அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்து கொள்ள பழக்கப்படுத்த வேண்டும்.
கல்லுாரிகளில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பாடங்களை படித்து காட்டுவதற்கு வாசிப்பாளர்கள் உள்ளனர்; அதேபோன்று, பள்ளிகளிலும் வாசிப்பாளர் இருந்தால் மாற்றுத்திறனாளிகளால் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
