/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'வாட்டர் ஆப்பிள்' வருமானம் ரூ.1.12 லட்சம்!
/
'வாட்டர் ஆப்பிள்' வருமானம் ரூ.1.12 லட்சம்!
PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

இயற்கை முறையில், எளிய பராமரிப்பில், செழிப்பான விளைச்சல் கொடுக்கும், 'வாட்டர் ஆப்பிள்' குறித்து கூறும், விருதுநகர் மாவட்டம், வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமநாதன்:
எங்கள் குடும்பத்துக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. நான் பள்ளிப் படிப்பு முடித்ததும், அப்பாவிற்கு உதவியாக விவசாயத்தில் இறங்கி விட்டேன்.
தலா 1 ஏக்கரில் கொய்யா, வாட்டர் ஆப்பிள், தலா அரை ஏக்கரில் பப்பாளி, நார்த்தங்காய் பயிரிட்டிருக்கிறேன். மீதி 2 ஏக்கரில் அத்தியும், செடி முருங்கையும் பயிரிடுவதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி உள்ளேன்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வாயிலாக, வாட்டர் ஆப்பிள் சாகுபடி குறித்து கேள்விப்பட்டேன்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில விவசாயிகள், இதை சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுப்பதாகவும், இதற்கு அதிக விலை கிடைப்பதாகவும் கூறினர்.
ஆந்திராவில் இருந்து ஒரு கன்று, 60 ரூபாய் என, மொத்தம் 160 கன்றுகள் வாங்கி, 2019 ஆகஸ்டில் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்தேன்.
எவ்வளவு இடைவெளியில் கன்றுகள் நடவு செய்யணும்; எப்படி பராமரிக்க வேண்டும்; எப்போது அறுவடைக்கு வரும் என்ற விபரங்களை, 'யு டியூப்' வீடியோக்களில், முன்கூட்டியே பார்த்து வைத்திருந்தேன். மேலும், விருதுநகரில் நர்சரி வைத்திருக்கும் நண்பரும் சில யோசனைகள் கூறினார்.
ஆச்சரியப்படும் அளவுக்கு அற்புதமாக விளைந்தது. இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், பழங்கள் நல்ல சுவையாகவும், அடர் சிவப்பு நிறத்தில் கண்களை ஈர்க்கும் வகையிலும் இருந்தன. ஏப்ரல் - ஜூலை மாதங்களில் தான் வாட்டர் ஆப்பிள் அறுவடை சீசன்.
இந்தாண்டு ஏப்ரல் கடைசி வாரமே, பழங்கள் காய்த்து குலுங்க ஆரம்பித்து விட்டன. அவற்றை பறித்து, விருதுநகர் சந்தையில் விற்பனை செய்தேன். இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை, 80 கிலோ வரை பழங்கள் கிடைத்தன.
மொத்த விற்பனையில் கிலோவுக்கு சராசரியாக, 80 ரூபாய் வீதம் கிடைத்தது. நான் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்திருந்தால், கிலோவுக்கு 150 ரூபாய் வரை கிடைத்திருக்கும்; ஆனால் நேரமில்லை.
கிலோ 80 ரூபாய் என மொத்தம், 1,400 கிலோ பழங்கள் விற்பனை செய்ததன் வாயிலாக, 1.12 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
பராமரிப்பு மற்றும் அறுவடை கூலி உட்பட எல்லா செலவுகளும் போக, 80,000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில், இன்னும் கூடுதலாக மகசூல் கிடைத்து, அதிக லாபம் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். தொடர்புக்கு 97878 85158
சொல்கிறார்கள்
கருநாகம் தீண்டியும் கலங்காத பாட்டி!
எள்ளு பேரன், பேத்தியருடன், ஐந்தாம் தலைமுறை கண்டு, நலமோடு வாழ்ந்து வரும், திருப்பூர் மாவட்டம், சின்னக்காளி பாளையத்தைச் சேர்ந்த, 107 வயதான பேச்சியம்மாள்: இந்த, 107 வயதிலும் ஊன்றுகோல் ஏதும் பயன்படுத்தாமல், தனித்து இயல்பாகவே நடந்து வருகிறேன். கைத்தறி நெசவாளியான நான், 90 வயது வரை தனி
மனுஷியாக அமர்ந்து, கைத்தறி புடவை நெய்து வந்தேன்.
என் மகன், மகள், பேரன் - பேத்திகளின் வற்புறுத்தலால் தான், நெசவுத்தறியில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.ஒரு கைத்தறி புடவை முழுதாக நெய்ய வேண்டும் எனில், நம் கையும், காலும் குறைந்தது, 5,000 முறைக்கு மேல் அங்கும் இங்கும் அசையும். தறி நெய்து நெய்து என் கையும், காலும் நல்லா வைரம் பாய்ந்த மாதிரி ஆகிப்போச்சு.மகள் வயிற்று பேத்திகளில் ஒருவரான சந்திரிகா: எங்க பாட்டி பிறந்தது, திருப்பூர் அருகே காரைப்புதுார். புகுந்த வீடு தான் சின்னக்காளி பாளையம். 'கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானியங்களை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு' என, பலமுறை
சொல்லியிருக்காங்க.
நேரத்துக்கு சரியாக சாப்பிடுவாங்க. நிறைய தண்ணீர் குடிப்பாங்க. ஓயாம ஏதாவது செய்தபடியே இருப்பாங்க. அப்படி இல்லன்னா, சும்மாவாச்சும் நடந்தபடியே இருப்பாங்க. 'இந்த ஆத்தா கொஞ்ச நேரமாச்சும் சும்மா இருக்காதா'ன்னு எங்களுக்கு எரிச்சலாக இருக்கும்; அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருக்கும்.
சொன்னா நம்ப மாட்டீங்க... எட்டு வருஷத்துக்கு முன்னாடி, என் பொண்ணு நிறைமதி பிறந்தா. அதாவது, எங்க ஆத்தாவுக்கு அவ கொள்ளுப்பேத்தி. அப்போது பாட்டிக்கு, 98 வயது.
அந்த பச்சிளங்குழந்தையை பராமரித்தது அவங்கதான். தன் காலை நீட்டி, குழந்தையை படுக்க வைத்துக் குளிப்பாட்டி, துவட்டி விட்டு, பவுடர் போட்டு விட்டது என, எல்லா வேலைகளையும் பாட்டி தான் செய்தாங்க... அவங்க வயதில் நம்மால் இப்படி, 'ஆக்டிவ்'வா இருக்க முடியுமா சொல்லுங்க!கொள்ளு பேத்திகளில் ஒருவரான கலைவாணி: 'சுகர், பிரஷர்' என, எதுவும் பாட்டிக்கு கிடையாது. அவங்க எப்போதும் பதற்றப்பட மாட்டாங்க; பயப்படவும் மாட்டாங்க. 85வது வயதில் அடுப்படியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தபோது, கருநாகம் ஒன்று அவங்களை தீண்டி விட்டது. ஆனாலும் பயப்படாமல், 'பக்கத்தில் ஏதாவது ஒரு அரசு மருத்துவமனைக்கு என்னை கூட்டிட்டு போங்க'ன்னு சொன்னாங்களாம்.
அங்கு சிகிச்சை கொடுத்ததில், உயிர் பிழைச்சுட்டாங்க. அந்த மனோபலம்தான் இந்த, 107 வயதிலும் அவங்களை ஆரோக்கியமாக வைத்துள்ளது.