/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கைத்தொழிலும் கல்வியும் எங்களை கைவிடவில்லை!
/
கைத்தொழிலும் கல்வியும் எங்களை கைவிடவில்லை!
PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

மெஹந்தியில் விதவிதமான ஓவியங்கள் வரைந்து அசத்தும், காரைக்குடியைச் சேர்ந்த மகாலட்சுமி: மதுரைதான் எங்கள் சொந்த ஊர். குடும்ப சூழ்நிலை காரணமாக, காரைக்குடிக்கு வந்து விட்டோம்.
அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால், அம்மாவும், பாட்டியும் வேலைக்குச் சென்று என்னையும், அக்காவையும் படிக்க வைத்தனர்.
நான், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பேஷன் டெக்னாலஜி படித்தேன். விடுமுறை நாட்களில், பூ கட்டி கொடுக்கும் வேலை செய்து வந்தோம். அதன் வாயிலாக, 400 ரூபாய் வரை கிடைக்கும். எங்கள் படிப்புக்கு தேவையான உபகரணங்களை அந்த பணத்தில் தான் வாங்கிக் கொள்வோம்.
சிறுவயது முதலே, நன்றாக படம் வரைவேன். மெஹந்தி வரையவும் கற்றுக்கொண்டேன். மெஹந்தியில் ஓவியங்கள் வரையலாம் என்று யோசனை வரவே, அதை முயற்சி செய்தேன்; நன்றாக வந்தது.
மணமக்களின் படம், பெற்றோர் படம், அவர்கள் விரும்பும் ஓவியங்கள் என, வரைந்து கொடுத்தேன். முதலில் எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் மெஹந்தி வரைந்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன்.
அதைப் பார்த்து, பலரும் தங்களுக்கும் வரைந்து தரக் கேட்டனர்; இப்படியே ஆர்டர்கள் பெருகின.
ஐடியா புதிதாக இருந்ததாலும், நான் வரையும் டிசைன்கள் பலருக்கு பிடித்து விட்டதாலும், தொடர்ந்து ஆர்டர்கள் வரத் துவங்கின. ஓவியக் கலைக்காக நான் எந்த வகுப்புக்கும் போகவில்லை. அது, தானாகவே வந்த கலைதான்.
வீட்டிலிருக்கும் பெண்கள் சுயதொழிலாகவும் இதை செய்யலாம். ஆர்வமும், சிறிது திறமையும் இருந்தால் போதும். நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் இதுவரை என்னிடம் 900 பேர் இந்த கலையைக் கற்றுள்ளனர்.
அவர்களில் பலரும் இதை சுயதொழிலாகவும் செய்யத் துவங்கி இருக்கின்றனர். 13 முதல் 30 நாட்கள் போதும்... எளிதாகக் கற்று விடலாம். நியாயமான கட்டணம் வாங்கி, இந்த கலையை பிறருக்கு கற்றுக் கொடுக்கிறேன்.
கடந்த மார்கழி மாதம்தான் கோலங்கள் போடுவதற்கென ஒரு, 'யு டியூப்' சேனல் ஆரம்பித்தேன். துவக்கத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது. பின் மளமளவென்று அதிகரித்து, ஒரே மாதத்தில் 1 லட்சத்தை நெருங்கி விட்டது.
முன்பு, பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால், நாங்கள் கற்றுக்கொண்ட கைத்தொழிலும், கல்வியும் எங்களை கைவிடவில்லை.
இப்போதைக்கு வாடகை வீட்டில் தான் உள்ளோம். சொந்த வீடு கட்டி, குடி போக வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அதுவும் கூடிய சீக்கிரமே நிறைவேறி விடும். அதற்காகவே, நானும், என் குடும்பத்தினரும் ஓய்வு, உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

