/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
புத்தகங்கள் தரும் அறிவே முக்கியமானது!
/
புத்தகங்கள் தரும் அறிவே முக்கியமானது!
PUBLISHED ON : ஜூன் 07, 2025 12:00 AM

சென்னை, சூளைமேட்டில் உள்ள, 'காபி அண்டு ரீசார்ஜ் கபே' உரிமையாளர் செந்தில்குமார்:
எங்கள் கபேயை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி துவங்கினோம். இது ஏதோ கபேக்காக மட்டும் செய்த ஐடியா இல்லை.
எனக்கு புத்தகங்கள் மேல் இருக்கிற மரியாதையையும், ஆர்வத்தையும் என்னோட பிசினசில் இணைத்ததில் உருவான ஐடியா. புத்தகங்கள் தரும் அறிவு மிகவும் முக்கியமானது. அதை மக்களிடம் சேர்க்க தான் இந்த முயற்சி.
இப்போது உள்ள டீக்கடை எல்லாம் கபேவாக மாறிவிட்டது. ஆனால் அங்கு செய்திகள், வாசிப்பு விவாதத்திற்கு எல்லாம் இடம் இல்லாமல் போய்விட்டது.
அதை மாற்றி, பழைய டீக்கடை பெஞ்ச் மாதிரி, கபே மற்றும் லைப்ரரி என்ற, 'கான்செப்ட்'டை எடுத்தேன். புத்தகங்களையும், மக்களையும் மீண்டும் இணைக்கக்கூடிய முயற்சிதான் இது.
அரசியல் சார்ந்த புத்தகங்கள், சிறார்களுக்கான புத்தகங்கள், கவிதை, நாவல், இலக்கியம் என, பல தரப்பட்ட நுால்களும் இங்கு இருக்கின்றன. காலை 7:00 முதல் இரவு 11:30 மணி வரை கபே திறந்திருக்கும்.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை புத்தகம் படிப்பதற்காகவே இங்கு வருவோரும் உண்டு. குறிப்பாக, பெற்றோர், தங்கள் குழந்தைகளை புத்தகம் படிக்க பழக்க, இங்கு அழைத்து வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
சமூகம்தான் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தது. அதனால், இந்த சமூகத்திற்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என்று நினைத்து, இந்த கபேயை துவக்கினேன்.
இதில் வரும் வருமானத்தைவிட, என் வாடிக்கையாளர்கள் இங்குள்ள புத்தகங்களை படித்து, அது குறித்தும், இந்த அனுபவம் குறித்தும் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் கருத்துகள் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
இதுவரை வாசிப்பு பழக்கமே இல்லாதவர்கள்கூட இங்கு வந்து புத்தகம் படித்ததாக கூறும்போது, நான் வெற்றி பெற்றதாக தோன்றும். இப்போது வாசிப்பு குறைந்து விட்டது.
மொபைல் போனில் வரும், 'பார்வேர்டு' செய்திகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதை தான் பலரும் செய்தி, வரலாறு என்று நம்புகின்றனர். உண்மை என்ன என்று தெரிந்துகொள்ள மக்களும் விரும்புவதில்லை.
இந்த சூழலில் புத்தகங்கள் தான் உண்மைக்கு ஓரளவுக்கு பக்கத்தில் இருப்பவை. அதனால், அவசியமாக நல்ல புத்தகங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்.
எதிர்காலத்தில், என் கபேவுக்கு பக்கத்தில் இருக்கும் வீடுகளில் தனியாக இருக்கும் வயதானவர்களை இங்கு அழைத்து வந்து, அவர்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாசிக்க வழிவகை செய்ய வேண்டும். படித்து முடித்ததும், அவர்களை வீட்டில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருக்கிறது.