PUBLISHED ON : ஜூலை 17, 2026 12:00 AM

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வரும், விருதுநகர் மாவட்டம், ரெங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா:
நான், மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே உழைக்க ஆரம்பித்து விட்டேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால், தீப்பெட்டி நிறுவன ஊழியர், வாசலில் தீக்குச்சி கட்டைகளை வைத்து விட்டு சென்றிருப்பார். அதை பார்த்த உடனே, வேலை செய்யணுமே என்ற கவலையில் அழுகை வரும்.
ஆனால், அப்பா சமாதானப்படுத்தி வேலை வாங்கி விடுவார். இரவு முழுக்க கட்டையை உரித்து, கட்டாக அடுக்கி வைப்பேன். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் நிறைய தீப்பெட்டி நிறுவனங்கள் இருந்தன. நிறுவனத்திற்கே சென்று பலரும் நேரடியாக வேலை பார்ப்பர்.
தொழிலாளிகளின் வீட்டுக்கே வந்தும் தீக்குச்சி கட்டைகளை முதலாளியோ, முகவர்களோ கொடுத்து செல்வர். குடும்ப கஷ்டம் காரணமாக, 15 வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, தீப்பெட்டி நிறுவனத்திற்கே வேலைக்கு சென்று விட்டேன்.
நாள் முழுக்க வேலை செய்தால், 10 கட்டுகள் அடுக்க முடியும்; 5 ரூபாய் சம்பளம் தருவர். அடுத்த சில ஆண்டுகளில் எனக்கு திருமணமாகி, ரெங்காபுரத்தில் குடியேறினோம். அப்போது, இங்குள்ள எல்லா வீடுகளுமே தீப்பெட்டி கம்பெனிகள் தான்.
இப்போது நாள் முழுதும் வேலை செய்தால், 25 கட்டுகள் அடுக்குவேன்; தினசரி வருமானம், 200 ரூபாய் வரை கிடைக்கும். வருமானம் போதவில்லை எனில், சில நாட்களில் விவசாய கூலி வேலைக்கு சென்று விடுவேன். அங்கும் கூலி, 250 ரூபாயை தாண்டாது.
எங்களுக்கென எந்த சங்கமும் கிடையாது; அரசு தரும் எந்த சலுகையும் எங்களுக்கு வருவதும் இல்லை. இருக்கிற கஷ்டம் போதாதென, இப்போது எங்களுடைய வேலையை செய்வதற்கு இயந்திரங்களும் வந்து விட்டன. நாங்கள் ஒரு வாரம் செய்யும் வேலையை, அது ஒரே நாளில் செய்து முடித்து விடுகிறதாம். கிடைக்கும் வருமானத்திற்கும் இப்போது இடைஞ்சல் வந்து கொண்டிருக்கிறது.
அந்த காலத்தில் படிப்பதற்கு வசதி இல்லை; அதன் அருமையும் தெரியவில்லை. அதனாலேயே நாங்கள் கஷ்டப்பட்டோம். குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டுமென, இரு மகள்களையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். ஒரு மகள் ஆசிரியர் வேலைக்கு செல்கிறாள்; இன்னொரு மகள் முனைவர் பட்டம் வாங்க இருக்கிறாள்; அவளும் நல்ல வேலைக்கு சென்று விடுவாள். இருண்டு கிடந்த என் வாழ்க்கையில், மகள்களின் படிப்பால் வெளிச்சம் வந்து கொண்டிருக்கிறது.
***
