/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
100 கிளைகளை எட்டுவது தான் அடுத்த இலக்கு!
/
100 கிளைகளை எட்டுவது தான் அடுத்த இலக்கு!
PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM

திருப்பூர், ராயபுரம் பகுதியில், 'சிக்கோஸ்' என்ற துரித உணவகத்தை நடத்தி வரும் கார்த்திக்: 'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்'கில் டிப்ளமா முடித்துவிட்டு, என்ன செய்வது என்ற குழப்பத்திலேயே இரண்டு ஆண்டுகள் ஓடின. பலரும், 'வேலைக்கு சென்று பிழைக்கிற வழியை பார்...' என்றனர்.
ஆனால், 'சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும்' என்ற எண்ணம் எனக்குள் உறுதியாக இருந்தது. நிரந்தர வருமானத்துக்கான தேவை எழுந்தபோது, சுயதொழில் குறித்த யோசனை மேலும் தீவிரமானது.
விளையாட்டாக நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, 'உணவு வியாபாரத்தில் இறங்கலாம்; தரமான, சுவையான உணவை கொடுத்தால், மக்கள் நம்மை தேடி வருவர்...' என்று கூறினேன்.
கடந்த 2020ல், சில நண்பர்களுடன் சேர்ந்து, 1.50 லட்சம் ரூபாய் முதலீட்டில் தள்ளுவண்டியில் சிறிய உணவு கடையை, 'சிக்கோஸ்' என்ற பெயரில் ஆரம்பித்தோம்.
எங்கள் கடைக்கு, அந்த பகுதி மக்களிடம் இருந்து, எதிர்பாராத அளவுக்கு ஆதரவு கிடைத்தது. அந்த உற்சாகம் தான், அடுத்தடுத்து கிளைகளை விரிவுபடுத்த ஊக்கம் கொடுத்தது.
'பிரான்சைஸ்' எனும் வாடிக்கையாளர் உரிமம் கொடுக்க துவங்கினோம். எங்களின் கிளை உரிமையாளர்கள் தேர்வில், தீவிர கவனம் செலுத்துகிறோம்; தினசரி செயல்பாடுகள், உணவு பொருட்களின் தரம், விலை மற்றும் சேவை என, அனைத்தையும் கண்காணிக்கிறோம்.
எங்களுடைய அனைத்து கிளையிலும் ஒரே விதமான சுவையும், தரமும் இருக்க வேண்டும் என்பதே எங்களின் அடிப்படை நெறி. இந்த நோக்கம் தான், எங்கள் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
திருப்பூர் மட்டுமல்லாமல், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி என பல மாவட்டங்களில் விரிவடைந்து, தற்போது ஆந்திர மாநிலத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளோம்; இப்போது, 35க்கும் மேலான கிளைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
திருப்பூர், ராயபுரம் கிளையில் மட்டும் தினசரி சராசரியாக, 15,000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும்.
வார இறுதி நாட்களில் மேலும் அதிகமாக இருக்கும்; மாதம், 1.50 லட்சம் ரூபாய் வீதமும், ஆண்டுக்கு, 18 லட்சம் ரூபாயும் லாபம் கிடைக்கிறது. மற்ற கிளைகளின் உரிமை பங்குதாரர்களுக்கு, 'வருமானத்தில் பங்கு' என்ற அடிப்படையில் லாபம் கிடைக்கிறது.
எங்கள் அடுத்த இலக்கு, 100 கிளைகளை எட்டுவது தான். அதற்கு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவு பொருட்களில், சுவையும், தரமும் இருக்க வேண்டும்; கிளை உரிமை பங்குதாரருக்கு வளர்ச்சியும், லாபமும் இருக்க வேண்டும்; இந்த இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பதே, வெற்றியை தரும் என நம்புகிறேன்!

