/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சம்பாதிப்பதற்கு ஆண், பெண் பேதம் கிடையாது!
/
சம்பாதிப்பதற்கு ஆண், பெண் பேதம் கிடையாது!
PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

சென்னை, என்.எஸ்.சி., போஸ் சாலையில், நடைபாதையில் பழக்கடை வைத்திருக்கும், 82 வயதான மூதாட்டி அமிர்தம்:
என் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், வீடூர் கிராமம். கணவர் வயலில் வேலை செய்தபோது, பாம்பு கடித்து இறந்து விட்டார். எங்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன். கணவர் இறந்தபின் வீட்டு வேலைகள் செய்து பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தேன்.
வீட்டில் சிறு பிரச்னை; என் 40 வயதில் கையில், 10 ரூபாயுடன் சென்னைக்கு வந்து விட்டேன். சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, 50 ரூபாய் தாள் கீழே இருந்தது. அதை எடுத்துக் கொண்டேன். சாமி எனக்கு கொடுத்த காசு என்று நினைத்துக் கொண்டேன்.
மறுநாள் காலையில் கொத்தவால்சாவடியில், 50 ரூபாய்க்கு கீரை வாங்கி கடை போட்டேன். வாங்கிய கீரை மிச்சமானது. எங்கள் ஊர்க்கார பையன் ஒருவன், இதே ஏரியாவில் பழக்கடை வைத்திருந்தான்.
அவன் வாயிலாக தான் பழ வியாபாரம் ஆரம்பித்தேன். கடந்த 41 ஆண்டுகளாக, பழ வியாபாரம்தான் செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு, 6,000 ரூபாய்க்கு விற்பனையாகும். அதில், 600 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
ஆரம்பத்தில், வீடு எடுத்து தங்குற அளவுக்கு வசதியில்லை. தனியாக இந்த மரத்தடியில் தான் தங்கினேன். மழைக்காலத்தில் ஒரு பெரிய பிளாஸ்டிக் ஷீட் வாங்கி கூடாரம் மாதிரி கட்டி, அதில் துாங்குவேன். 42 ஆண்டுகளாக சென்னையில் இதுதான் என் வீடு.
தினமும் அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து, பொதுக் கழிப்பறையில் குளித்து முடித்து, மார்க்கெட் சென்று பழங்களை வாங்கி, இங்கு வந்துவிடுவேன். காலை 6:00 மணிக்கு வியாபாரம் ஆரம்பித்தால், இரவு 8:00 மணி வரைக்கும் போகும்.
எனக்கு 12 பேரக் குழந்தைகள் உள்ளனர். ஆண் இல்லாத வீடு என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, எல்லாருக்கும் பார்த்து பார்த்து செய்திருக்கிறேன். மகனுக்கு ஊரில் இரண்டு மாடி வீடு கட்டி கொடுத்திருக்கிறேன். மகள்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் பேரக் குழந்தைகளின் படிப்புக்கும் பணம் கொடுத்து விடுகிறேன்.
'உழைத்தது போதும்' என்று மகன் கூப்பிடத்தான் செய்கிறான்; ஆனால், எனக்கு விருப்பமில்லை. ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஊருக்கு செல்வேன். ஐந்து நாட்கள் தங்குவேன்; ஆறாம் நாள் சென்னை கிளம்பி விடுவேன்.
உழைத்தால்தான் சாப்பாடு இறங்கும். நான் சென்னைக்கு 50 ரூபாய் கடன்பட்டிருக்கிறேன். சம்பாதிக்க ஆம்பளை, பொம்பளை வேறுபாடு கிடையாது. வயது கிடையாது. மனதில் தைரியம் இருந்தால் போதும்... உடம்பில் தெம்பு தானாக வரும்.

