PUBLISHED ON : மே 17, 2026 11:52 AM
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, போராடி மீண்ட, தஞ்சாவூரை சேர்ந்த 39 வயதான நிஷா:
தற்போது, சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகிறேன். கடந்த, 2013ல் எனக்கு குழந்தை பிறந்தது. அப்போது, திடீரென முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டேன். என் நோய் எதிர்ப்பு மண்டலமே என்னை எதிர்க்கும் அளவுக்கு முடக்குவாதம் பாதித்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அது. என்னால், மற்றவர்கள் உதவியின்றி கழிப்பறை செல்வதோ, கதவை திறப்பதோ, தண்ணீர் பாட்டிலை திறக்கவோ முடியாது. அந்த அளவுக்கு என் கால் மூட்டுகள் எல்லாம் வீங்கி, தினசரி வேலைகளுக்கே முழுதாக என் குடும்பத்தை சார்ந்திருக்கிற நிலை வந்தது.
இதனால், வேலையை விட வேண்டிய சூழல் வந்தது. கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் இந்த பிரச்னையை அனுபவித்தேன். அப்படியே இருந்து விடக்கூடாது என்று தோன்றியது. இந்த மாதிரி பிரச்னையில் இருந்து வெளியே வந்த பலரின் காணொளிகளை பார்த்தேன்.
நான் படித்த கட்டுரைகள், வீடியோக்களின் மூலம் பலரும் உடல் ரீதியான செயல்பாடுகள் வாயிலாக மீண்டது தெரிந்தது. படுத்த படுக்கையாக இருந்த நான், பொறுமையாக எழுந்து மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தேன். உடல் எடையை சிறிது சிறிதாக குறைத்தேன். மூட்டுகளை வலிமையாக்க பயிற்சி செய்தேன்.
வலிகள் குறைந்து, உடம்பும், மனதும் வலிமையானதாக உணர்ந்தேன். ஆனால், அப்போதும் என்னால் திருப்தியாக இருக்க முடியவில்லை. மலையேறணும், மாரத்தான் போகணும் என்று தோன்றியது.
உத்தரகண்ட்டில் உள்ள, 'தயாரா புக்யால்' என்ற இடத்துக்கு சென்றேன். இமயமலை தொடரில் அதிக உயரத்தில் இருக்கிறது இந்த ஊர். முடக்குவாத பிரச்னையில் இருந்து மீண்டு, அந்த உச்சிக்கு சென்ற நபர் நானாகத் தான் இருப்பேன். உச்சியை தொட்ட அந்த தருணம் என் வாழ்க்கையை மாற்றியது.
தொடர்ந்து நடக்க வேண்டும், உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும். அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். நேபாளம், பூடான், ஹிமாச்சல பிரதேசம் என, கடந்த மூன்று ஆண்டுகளில், 15 மலையேற்றங்களை முடித்துள்ளேன்.
எவரையும் சார்ந்திருக்க கூடாது என்று நினைத்து, பல நாடுகளுக்கு தனியாக பயணம் செய்து வருகிறேன். சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பயணத்திற்காக ஒதுக்கி விடுவதால், பொருளாதார ரீதியாக நான் எவருக்கும் பாரமாக இல்லை. என் வாழ்க்கை அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மற்றவர்களுக்கும் நம்பிக்கையை விதைத்து வருகிறேன்.
