'மாதம் ரூ.4,500க்கு 2 வேளை உணவு வீடு தேடி வரும்!'
'மாதம் ரூ.4,500க்கு 2 வேளை உணவு வீடு தேடி வரும்!'
PUBLISHED ON : ஆக 04, 2026 12:00 AM

சமூக வலைதளங்கள் மூலம், 'ஆர்டர்'கள் எடுத்து சமைத்துக் கொடுக்கும், சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த தாய் சாந்தி மற்றும் மகள் பரமேஸ்வரி:
* சாந்தி: ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், வீட்டிலேயே அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஆரம்பித்து, நடத்தி வந்தேன். எனக்கு சமையல் மீது தனி ஆர்வம். 'உணவு தொடர்பான தொழில் செய்ய வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
ஆரம்பத்தில் சிலருக்கு மட்டுமே மீன் குழம்பு, சிக்கன் குழம்பு சமைத்துக் கொடுத்தேன். இதில் கிடைத்த வரவேற்பு, இதை ஒரு தொழிலாக மாற்றலாம் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது.
* பரமேஸ்வரி: நான் பி.இ., எலக்ட்ரானிக்ஸ் படித்தேன். அம்மா தொழில் ஆரம்பித்த ஆறு மாதங்களில், என் மகனை அம்மாவிடம் விட்டுவிட்டு, வேலைக்காக ஜெர்மனி சென்றேன். ஒரு கட்டத்தில் அம்மாவின் கனவா, என் வேலையா என்று யோசிக்க வேண்டிய நிலை வந்தது. வேலையை விட்டுவிட்டு இந்தியா வந்ததும், அம்மாவுடன் இணைந்து தொழிலை கையில் எடுத்தேன்.
மாத சந்தா முறையை அறிமுகப்படுத்தி, 'துருவ்ஸ் அறுசுவை கிச்சன்' என்ற நிறுவனத்தை துவக்கினோம். நாங்கள் எப்படி சமைக்கிறோம், எங்களுடைய இன்றைய சமையல் என்ன, எங்கள் இடம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது, வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள் என்று அனைத்தையும் காணொளிகளாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தேன்; அதிகமான ஆர்டர்கள் கிடைத்தன.
எங்களுடைய மாத சந்தா முறையில், 4,500 ரூபாய் செலுத்துவோருக்கு, இரண்டு வேளை சாப்பாட்டை அவர்கள் வீட்டிற்கே கொடுத்து விடுவோம். இதனால், எங்களால் திட்டமிட்டு சமைக்க முடிந்தது. அப்பாவும், தம்பியும் இருசக்கர வாகனத்தில் உணவை வினியோகம் செய்கின்றனர்.
இப்போதைக்கு சாலிகிராமத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் உள்ள, 30 பேருக்கு மாத சந்தா முறையில், உணவு வினியோகம் செய்து வருகிறோம். துாரத்தில் இருப்போர், அவர்களே வினியோகப் பணம் கொடுத்து, உணவை வாங்கிக் கொள்கின்றனர்.
தற்போது, எங்கள் வீட்டு வாசலிலேயே சிறு உணவகம் ஆரம்பித்துள்ளோம். நேரில் வந்தும் சாப்பாடு வாங்கிச் செல்லலாம். மொத்தம், 100 பேருக்கு சமைத்துக் கொடுக்கிறோம்.
உறவினர்கள் தராத ஆதரவை முகம் தெரியாத வாடிக்கையாளர்களும், எங்கள் சமூக வலைதள பக்கத்தைப் பின்பற்றுவோரும் தருகின்றனர். இப்போது மாதம், 1.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. கூடிய விரைவில் பெரிய நிறுவனமாக மாறுவோம்.
***
