தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'எதேச்சையாக நட்ட விதைகளால் நல்ல வருமானம்!'

'எதேச்சையாக நட்ட விதைகளால் நல்ல வருமானம்!'

'எதேச்சையாக நட்ட விதைகளால் நல்ல வருமானம்!'


PUBLISHED ON : ஆக 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறைந்த முதலீடு மற்றும் எளிய பராமரிப்பில், கொடுக்காப்புளி சாகுபடியில் நிறைவான லாபம் ஈட்டும், விருதுநகர் மாவட்டம், மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 70 வயதாகும் கோபாலகிருஷ்ணன்:

நாங்கள் விவசாயக் குடும்பம். தாத்தா மற்றும் அப்பாவுடன் இணைந்து, விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். என், 35 வயதில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்; இப்போது, 70 வயதாகிறது. 35 ஆண்டுகளாக, என் நிலத்தில் ரசாயன உரங்களே பயன்படுத்தியது கிடையாது.

ஒருமுறை கொடுக்காப்புளி வாங்கி சாப்பிட்டு, விதைகளை நிலத்தில் விதைத்திருந்தேன். அவை நன்கு முளைத்து, மூன்றாண்டுகளில் பெரிய மரங்களாகி, நன்கு காய்க்க ஆரம்பித்தன. பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்தபோது, நல்ல லாபமும் கிடைத்தது.

அதனால், அதிக அளவில் கொடுக்காப்புளி மரங்களை வளர்க்க ஆரம்பித்தேன். 20 ஆண்டுகளாக இந்த விவசாயத்தை தான் பிரதானமாக செய்கிறேன். இது அருமையான பயிர்; குறைவான தண்ணீரும், இடுபொருட்களும் கொடுத்தாலே போதும்; செழிப்பான விளைச்சல் கிடைக்கும்.

இதன் சாகுபடி குறித்தோ, அதிக வருமானம் தரும் என்றோ ஆரம்பத்தில் எனக்கு தெரியாது; எதேச்சையாக விதைத்த பயிர் இது. அதனால், இஷ்டத்துக்கு விதைத்து வைத்திருந்தேன். அவை நல்ல வருமானம் தர ஆரம்பித்த பின் தான், கொடுக்காப்புளி ரகங்கள், சாகுபடி முறைகள் குறித்து அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

கொடுக்காப்புளியில் இனிப்பு, துவர்ப்பு மற்றும் இந்த இரண்டும் கலந்த சுவை என, மூன்று வகைகள் இருக்கின்றன. இனிப்பு ரகத்துக்கு சந்தையில் அதிக வரவேற்பு உண்டு. என் தோட்டத்தில் மூன்று வகையும் கலந்து, 75 மரங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை பழங்கள் அதிகமாக கிடைக்கும்; ஜூன் மாதத்துடன் காய்ப்பு முடிந்து விடும். ஓராண்டுக்கு, ஒரு மரத்தில் இருந்து சராசரியாக, 30 கிலோ பழங்கள் வீதம், 75 மரங்கள் வாயிலாக, 2,250 கிலோ பழங்கள் கிடைக்கின்றன.

அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வினியோகம் செய்கின்றனர். எனக்கு, 1 கிலோவுக்கு 250 ரூபாய் வரை விலை கிடைக்கும். எப்படி பார்த்தாலும், 200 ரூபாய்க்கு குறையாது.

ஓராண்டுக்கு மொத்தம், 2,250 கிலோ பழங்கள் விற்பனை வாயிலாக, 4.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. பராமரிப்பு, அறுவடை என எல்லா செலவுகளும் போக, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us