'10 ரூபாய்க்கு தோசையும் மீன் குழம்பும் தருகிறேன்!'
'10 ரூபாய்க்கு தோசையும் மீன் குழம்பும் தருகிறேன்!'
PUBLISHED ON : செப் 09, 2026 12:40 AM

குறைந்த விலைக்கு தோசை விற்பனை செய்யும் புதுச்சேரி, சின்ன காலாப்பட்டைச் சேர்ந்த ரேவதி:
என் கணவர் சிறு வயதில் சாப்பாடு இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்; அந்த அனுபவத்தை அடிக்கடி கூறுவார். அதனால், குறைவான விலைக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து, புதுவை பல்கலைக்கழகத்திற்கு எதிரில் தள்ளுவண்டியில் தோசை கடை ஆரம்பித்து, ஒரு தோசை 10 ரூபாய் என கொடுத்தோம்.
எங்கள் கடைக்கு மாணவர்கள் அதிகமாக வருவர். ஆனால், நாங்கள் 10 ரூபாய்க்கு தோசை விற்பது பிடிக்காமல், அக்கம் பக்கத்தில் கடை நடத்துவோர் காவல் துறையிடம் சொல்லி, எங்களை அப்புறப்படுத்தி விட்டனர். அதன்பின், வேறு இடம் கிடைக்காமல், வீட்டிலேயே தோசை கடை ஆரம்பித்தோம்.
புது இடம் யாருக்கும் தெரியாது என்பதால், வியாபாரம் குறைவாகவே இருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், எங்கள் கடையை தேடி வந்து சாப்பிட ஆரம்பித்தனர். அவர்கள், மற்றவர்களிடம் கூறி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கடையை அனைவருக்கும் தெரிய வைத்தனர்.
கல்லுாரி மாணவர்கள் பலரும், எங்கள் தோசை கடையை காணொளிகள் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இப்போது நன்றாகவே வியாபாரம் நடக்கிறது. இன்றைக்கும் எங்களுக்கு பெரிய ஆதரவு மாணவர்கள் தான்.
அதனால், கல்லுாரி விடுமுறை எனில், நாங்களும் கடை வைக்க மாட்டோம். விலை குறைவு; உணவு சுவையாகவும், தரமாகவும் இருக்கும் என்பதால், மாணவர்களுக்கு பிடித்த இடமாகவும் இருக்கிறது. படிப்பை முடித்து வேலைக்கு சென்றிருந்தாலும், வெளியூருக்கே சென்றிருந்தாலும், புதுச்சேரி வந்தால், எங்கள் கடைக்கு வந்து பலரும் சாப்பிட்டு செல்கின்றனர். அதை தான், எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும், சந்தோஷமாகவும் பார்க்கிறோம்.
காலையிலேயே வேலைகளை ஆரம்பித்து விடுவேன். கணவரும், இரு மகன்களும் உதவியாக இருக்கின்றனர். அனைவரும் சேர்ந்து பார்த்துக் கொள்வதால் தான், இந்த கடையை தொடர்ந்து நடத்த முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில், எல்லா பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதனால், நாங்களும் தோசை விலையில் மாற்றம் செய்யலாம். ஆனாலும், இப்போதும் 10 ரூபாய்க்கு தான் தோசை கொடுக்கிறோம்; பெரிய லாபம் இல்லை என்றாலும், இதில் கிடைக்கும் மனநிறைவே எங்களுக்கு போதும்.
தோசையுடன் சட்னி, சாம்பார் மட்டுமின்றி, மீன் குழம்பும் தருகிறோம். குறைந்த விலையில் சுவையான உணவு கிடைப்பதால், மாணவர்கள் மனதில், தனி இடம் பிடித்திருக்கிறது எங்கள் கடை.
***
