'வாழ்க்கை தரும் 2வது வாய்ப்பை சரியாக பயன்படுத்தணும்!'
'வாழ்க்கை தரும் 2வது வாய்ப்பை சரியாக பயன்படுத்தணும்!'
PUBLISHED ON : ஆக 29, 2026 12:00 AM

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், இதய மாற்று அறுவை சிகிச்சை முடித்து, தற்போது முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்து வரும், வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த, 24 வயதான காவ்யஸ்ரீ:
பிறக்கும்போதே எனக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. நான் லேசாக இருமினால் கூட, அம்மா துாங்காமல் விழித்துக் கொண்டே இருப்பார். ஆனால், ஒருநாள் கூட என் முன் அவர் அழுததே கிடையாது.
என் பெற்றோர் இதை உணர்வுப்பூர்வமாக பார்க்காமல், அறிவுப்பூர்வமாக அணுகினர். 5 வயதானதும், எனக்கு இதயம் சார்ந்த பிரச்னை இருக்கிறது என்று கூறி புரிய வைத்து, 'மீண்டு வந்து விடலாம்' என்று நம்பிக்கை கொடுத்தனர்.
நான் ஆறாம் வகுப்பு படித்தபோது உடல்நிலை மோசமானது; 10 மீட்டர் நடந்தாலே மூச்சு வாங்கியது. அப்போது, என் இதயம் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்; பள்ளிப்படிப்பும் அப்படியே நின்று விட்டது.
'இனி மருந்து, மாத்திரையால் பயன் இல்லை; இதய மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு' என்று மருத்துவர்கள் கூறினர். மாற்று இதயம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஒரு பக்கம், அதற்காக ஒரு குடும்பம் அன்புக்குரிய ஒருவரை இழக்க வேண்டி இருக்குமே என்ற குற்ற உணர்வு இன்னொரு பக்கமுமாக காத்திருந்தேன்.
நான் சிகிச்சை எடுத்த மருத்துவமனையிலேயே, இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மூன்று மாதங்களில் இதயம் கிடைத்தது. ஒன்பது மணி நேர அறுவை சிகிச்சை முடிந்து, நான் கண்விழித்தபோது முதன் முதலாக அம்மாவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தேன்.
உடல்நிலை சரியானாலும், எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. ஆனாலும், படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 75 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரியில் சேர்ந்தேன். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள கல்லுாரியில், முதுகலை உளவியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது, முனைவர் பட்டம் பெறும் ஆய்வில் உள்ளேன். ஒரு காலத்தில், 10ம் வகுப்பு தேர்வே கேள்விக்குறியாக இருந்த என் வாழ்க்கை, இன்று ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதும் அளவுக்கு மாறி இருக்கிறது. நான் நடக்கக்கூடாது என்று சொன்னபோதே ஓட ஆசைப்பட்டேன். இப்போது, 'கொஞ்சம் வேகமாக நடக்கலாம்' என்று கூறி இருக்கின்றனர். பிறகு என்ன? பறக்க ஆசைப்பட வேண்டியது தான்.
வாழ்க்கை இரண்டாவது வாய்ப்பை கொடுத்தால், அதை இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலரும் இப்போது என்னை முன் உதாரணமாக பார்க்கின்றனர். உறுப்பு தானம் செய்யலாம் என ஒரு குடும்பம் எடுத்த முடிவு, இன்று என்னை பெற்றவர்களின் சிரிப்பாக மாறி இருக்கிறது.
***
