சோழர்களின் பெருமை அறிய இந்த புத்தகம் மிகவும் உதவும்!
சோழர்களின் பெருமை அறிய இந்த புத்தகம் மிகவும் உதவும்!
PUBLISHED ON : ஜூலை 20, 2023 12:00 AM

'சோழர்களின் பிரமாண்டம்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கும், தமிழக வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் குமார் ஜெயந்தின் மனைவி, ருச்சி ப்ரீதம்:
டில்லி பல்கலை கழகத்தில், வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்றேன். அதன்பின், சட்டப் படிப்பை முடித்தேன். 1995 முதல், தமிழகத்தில் வசித்து வருகிறேன்.
இந்திய கலை, கோவில்கள் மற்றும் கலாசாரத்தின் மீது, எனக்கு ஒரு வித ஈர்ப்பு இருந்தது.
அது தான், இந்தியா மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல்வேறு கட்டட கலை அதிசயங்களை பற்றி அறிந்து கொள்வதற்காக பயணிக்கவும், எழுதவும் வழிவகுத்தது.
'சோழர்களின் பிரமாண்டம்' புத்தகமானது, சோழர்களின் மகத்துவம் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதோடு, தமிழகம் முழுதும் பரவியுள்ள பெரிய மற்றும் சிறிய சோழர் கால கோவில்களை பற்றிய விபரங்களையும் உள்ளடக்கியுள்ளது.
சோழர்கள் தங்களின் சமயச் சார்புகள், பக்தி மார்க்கம், நில நிர்வாகம், போர் முறைகள், குடும்ப விஷயங்கள் மற்றும் பலவற்றை, மக்கள் புரிந்து கொள்வதற்காக செப்புத் தகடுகள் மற்றும் கோவில்களின் சுவர்களில் விரிவான பதிவை எழுதி வைத்துள்ளனர். 9, 10ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஆரம்ப கால சோழர் கோவில்கள், 11ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்ட கம்பீரமான கோவில்களுக்கு முன்னோடியாக இருந்தன.
இக்கோவில்களின் கட்டட கலை மற்றும் கலையின் வளர்ச்சியை எடுத்துரைப்பதன் வாயிலாக, இந்நூல் வாசகர்களை, அந்தக் காலகட்டத்துக்கு அழைத்துச் செல்வது நிச்சயம்!
தஞ்சாவூரிலுள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் பிரமாண்டமான கருவறையை சுற்றியுள்ள தாழ்வாரங்களை அலங்கரிக்கும், கம்பீரமான சோழர் சுவரோவியங்களுக்கு என்றே, புத்தகத்தில் தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தச் சகாப்தத்தின் மிகப்பெரிய கலை சாதனைகளில் ஒன்றாக கருதப்படும், சோழர்களின் வெண்கலங்களுக்கும் ஓர் அத்தியாயம் தரப்பட்டுள்ளது.
சோழர்களின் சாதனைகள் பற்றிய நம்பகமான தகவல்கள் அடங்கிய, அனைவரும் படிக்கக்கூடிய ஒரு புத்தகம் தேவை என்பதை உணர்ந்தேன்.
அந்தத் தூண்டுதலே, இந்த புத்தகம் உருவாக காரணம். சோழர்கள், பிரமாண்ட கோவில்களை கட்டியவர்கள்; சிறந்த நிர்வாகிகள், பேரரசுகளை அமைத்தவர்கள், ஈடு இணையில்லாத வகையில், கடல் கடந்து வாணிபம் செய்தவர்கள் என்ற வகையில் மட்டுமின்றி, சோழர்கள் எத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்பதை, அனைத்து இந்தியர்களும் அறிய இந்தப் புத்தகம் உதவும்.
தமிழகம் ஆரம்ப கால வரலாற்றில், ஒரு தனித்துவமான கலாசாரத்தை கொண்டிருந்தது. தமிழகத்தின் அற்புதமான கலை மற்றும் கட்டட கலை என்னை எப்போதும் கவர்ந்துஉள்ளது.
