/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கை விவசாயத்துக்கு பயிற்சி மையம்!
/
இயற்கை விவசாயத்துக்கு பயிற்சி மையம்!
PUBLISHED ON : பிப் 27, 2026 12:09 AM

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ராமசுப்ரமணியன்: இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை, விவசாயிகள் தங்களுடைய யோசனையையும், அனுபவத்தையும் வைத்தே செயல்படுகின்றனர். அதையெல்லாம் பதிவு செய்து, பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம்.
இம்மையம், 17 பயிர்களுக்கு உயிர்ம வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்களை ஆய்ந்து பரிந்துரை செய்துள்ளது. மேலும், 'சிலிக்கா' எனும் இயற்கையான வேதியியல் கலவை, எவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுகிறது, கடல் பாசி எவ்வாறு வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வுகளும் நடக்கின்றன.
விவசாயிகள் கண்டுபிடிக்கும் இயற்கை உரங்களும் இங்கு பரிசோதனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்கிறோம்.
விவசாயிகள் தங்களுடைய தேவையை பொறுத்து, இம்மையத்திற்கு நேரில் வந்து இடுபொருட்களை வாங்கி கொள்ளலாம்; இணையதளங்கள் வாயிலாக விற்பனை செய்வதில்லை. காரணம், வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால், இடுபொருட்களில் வாயுக்கள் உருவாகி, தரம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதனால், அருகிலுள்ள பகுதிகளுக்கு மட்டும், 'கூரியர்' வாயிலாக அனுப்புகிறோம். பெரும்பான்மை விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு ஊக்குவிக்க வேண்டும் என்பதே, இம்மையத்தின் முதன்மையான நோக்கம். அதை நிறைவேற்றும் வகையில், 'அட்மா' என்ற திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண் பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.
விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, தமிழக வேளாண் துறையின் விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பிரத்யேக பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன.
சமீபத்தில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இம்மையத்தின் சிறந்த செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, இதை இயற்கை வேளாண்மை மையமாக அறிவித்து, பயிற்சிக்கான நிதியும் வழங்கி வருகிறது.
இயற்கை வேளாண்மையை தேர்ந்தெடுக்கும் இறுதியாண்டு மாணவர்கள், அனுபவ கற்றல் முறையில், மூன்று மாதங்கள் இங்கு பயிற்சி பெறுகின்றனர். இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இங்கு வழிகாட்டப்படும்.
விவசாயிகள் மட்டுமல்லாது, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பல தரப்பினரும் இங்கு பயிற்சி பெற்று, நல்ல முறையில் பலனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி, 750 ரூபாய் கட்டணத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: 93342 09452

