PUBLISHED ON : மே 29, 2026 12:00 AM

சமூக வலைதளங்களில் ஒன்றான, 'யு - டியூப்'பில் பிரபலமடைந்த, ஷீபா கிரேஸ் - பெஞ்சமின் தம்பதி:
ஷீபா கிரேஸ்: நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் இதழியல் படித்து விட்டு, மேற்படிப்புக்காக 2016ல் கனடா சென்றேன்.
படித்து முடித்ததும், பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை கிடைத்தது. அங்கு பெஞ்சமின் அறிமுகமாக, காதலிக்க ஆரம்பித்தோம்.
பெஞ்சமின் குணம் என் பெற்றோருக்கும் பிடித்ததால், திருமணத்திற்கு சம்மதித்தனர். எனக்குள் இருக்கும் இதழியல் திறமைகளை இழந்துவிடக் கூடாது என்பதால், முதலில் யு - டியூப் சேனல் ஆரம்பித்தேன்.
அதன்பின், இரண்டு நாடுகளை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற காணொளிகளை பதிவிட ஆரம்பித்தேன்.
கணவருக்கு தமிழ் கற்க ஆர்வம் இருந்ததால், என் வீடியோக்கள் அவருக்கு ஒரு பயிற்சியாகவும் இருந்தன. நாங்கள் எதிர்பார்க்காத வகையில், எங்கள் காணொளிகளுக்கு மக்கள் ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்தனர்.
கனடாவில் குளிர்காலத்தில் என் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. என் கணவர், புற்றுநோயாளிகள் மத்தியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அது உணர்வுபூர்வமாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் மன அழுத்தமான வேலை.
இருவரும் முழுநேரம் வேலை பார்த்தால் தான், எங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை இருந்ததால், இந்தியா வந்து விட்டோம்.
இங்கு வந்ததுமே, எங்கள் சேனலுக்கு நிறைய விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. என் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
தொடர்ந்து, பல காணொளிகளை பதிவிட வேண்டும்; வீட்டிலேயே சின்னதாக பேக்கரி ஆரம்பிக்கணும். இதை எல்லாம் அடையும் இலக்கை நோக்கி, சந்தோஷமா சென்று கொண்டிருக்கிறோம்.
பெஞ்சமின்: கனடாவில் ஒரு சிறு கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். எனக்கு மூன்று சகோதரர்கள். ஷீபாவை எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகவும் பிடித்து விட்டது. 2022ல் எங்களுக்கு திருமணம் ஆனது.
அவர், யு - டியூப் சேனல் ஆரம்பித்தபோது, அவருக்கு உறுதுணையாக இருக்க நினைத்து, சில உதவிகளை செய்ய துவங்கி, நானும் காணொளிகளை பதிவிட ஆரம்பித்தேன்.
நான், கிரைண்டரில் மாவு அரைத்து, தோ சை சுடுவது உள்ளிட்ட காணொளிகள், பல லட்சம் பார்வையாளர்களை கடந்தன. நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருப்பதால், இன்னும் சந்தோஷமாக இருக்கிறோம்; நிறைய நேரம் ஒன்றாக செலவிடுகிறோம்.
என்னை மிகவும் பிடித்திருப்பதாக பல இந்தியர்களும் பதிவிடுவதை பார்க்கும் போது, மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
