PUBLISHED ON : பிப் 27, 2024 12:00 AM

கணவருடன் பைக்கில் காஷ்மீர் வரை சென்று வந்துள்ள, ராமநாதபுரம் மாவட்டம், பேராவூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ருதி: சொன்னா நம்புவீங்களான்னு தெரியல... என் கணவரின், 'வாட்ஸாப் ஸ்டேட்டஸ்' பார்த்து தான், இவரை நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்குமேன்னு நினைச்சேன்.
இவர் என் அத்தை பையன் தான். ஆனாலும் பேசிக்கல்லாம் மாட்டோம். அடிக்கடி ஊர் ஊராக பயணம் செய்து, அதை ஸ்டேட்டசாக வைப்பாரு. ஒரு முறை, அவர் லடாக் போன புகைப்படம், வீடியோவை ஸ்டேட்டசில் வைத்திருந்தார்.
ஊரை விட்டு ரொம்ப துாரம் போகாத எனக்கு, இப்படியும் ஒரு உலகம் அந்தப் பக்கம் இருக்கான்னு ஆச்சரியமாக இருந்தது. அங்க போகணும்னு ஆசை வந்துச்சு.
அதைப் பற்றி அவரிடம் பேச துவங்கிய போது தான், காதலிக்க துவங்கி, திருமணமும் முடிந்தது. நான் ஆசைப்பட்ட மாதிரியே, 'யமஹா எப்.சி., 25' பைக்கில், இரண்டு முறை லடாக்கும், ஒருமுறை டில்லிக்கும் சென்று வந்திருக்கிறோம்.
திருமணம் ஆன ஆண்டே நாங்கள் லடாக் பைக் ட்ரிப் கிளம்பியபோது, 'நகைகளை அடகு வைத்து நாங்கள், ட்ரிப்புக்கு கிளம்புறோம்'னு பேச துவங்கி விட்டனர். ஆனால், அந்த ட்ரிப்புக்காகவே அவர் இரவு, பகலாக வேலை பார்த்து சேர்த்த காசு அது.
ஆனாலும், எங்களது வீட்டினர், 'நீ மட்டும் போ, பொம்பளப் புள்ளைய பைக்கில் அவ்ளோ துாரம்லாம் கூட்டிட்டு போகக் கூடாது'னு சண்டை போட்டாங்க. கணவர் கொடுத்த தைரியம் தான், எல்லாவற்றையும் மீறி, என்னை பைக்கில் ஏற வைத்தது.
திருமணமாகி மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை இல்லை. 'நீங்கள் இப்படி ஊர் சுற்றுவதால் தான் குழந்தை இல்லை'ன்னும் பேசினாங்க. ஆனால், நாங்கள் எதற்கும் கலங்கவில்லை. தற்போது எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பொதுவாக, பயணத்தில் நாங்கள் எங்கு, 'ரூம்' போட்டாலும், பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள, என் கணவர், 'கேமரா டிடெக்டர்' வைத்து அந்த இடத்தை, 'செக்' பண்ணிடுவாரு. ஒருமுறை, டில்லி பக்கத்தில் நாங்கள் தங்கியிருந்த ஒரு ரூமை அப்படி பரிசோதித்த போது, 'ஏசி'யில் ஒரு, 'ஹிடன் கேமரா' இருந்தது; அந்த 'ஏசி'யை உடைச்சிட்டோம்.
'ஏன் உடைச்சீங்க?' எனக் ஹோட்டல் நிர்வாகம் கேட்டால், பேசிக்கலாம்னு நினைத்தோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. தெரிந்தே தான் அந்தத் தவறை செய்துட்டு இருந்திருக்காங்க. அதனால், இந்த, 'டெக்னாலஜி' உலகத்தில் எங்கு சென்றாலும், கவனமாக இருக்க வேண்டும்.
பல தடைகளை தாண்டி, நான் போக ஆசைப்பட்ட, காஷ்மீரில் இருக்கிற லடாக்கை முதன் முதலாக பார்த்த அந்த நொடி, பட்ட கஷ்டமெல்லாம் துாசியாக பறந்து போச்சு. மலை, பனி, ஆறு, சாலைன்னு கண்களை மூடவே முடியாத பரவசம். இந்தியாவின் தென்கோடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பொண்ணுக்கு அந்த அனுபவம் ரொம்ப அரிதானது.
