/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.10 கோடிக்கு மேல் வணிகம் செய்கிறோம்!
/
ரூ.10 கோடிக்கு மேல் வணிகம் செய்கிறோம்!
PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM

குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய, குளியல் மற்றும் சரும பாதுகாப்பிற்கான பொருட்களை, 100 சதவீதம் இயற்கை பொருட்களால் தயாரித்து விற்பனை செய்து வரும், 'ரூட் அண்டு சாயில்' நிறுவனத்தின் உரிமையாளரான, ஈரோடு மாவட்டம், தொட்டம்பாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி:
எம்.டெக்., முடித்தவுடன் திருமணமானது. கணவர் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார். எனக்கு பெண் குழந்தை பிறந்த ஆறு மாதங்களில், அவள் முகத்தில் ஒரு தடிப்பு வந்தது. மருத்துவர்களிடம் சென்றபோது, களிம்பு தந்தனர். சிறிது நாளில் சரியானது; ஆனால் மீண்டும் வந்தது. ஒரு கட்டத்தில் பெரிய கவலையானது.
அப்போது, என் கணவரின் நண்பர் மனைவி இதற்கு ஒரு தீர்வு கூறினார். அது, 'தேங்காயில் இருந்து பாலெடுத்து ஒருநாள் அப்படியே வைத்திருந்தால், மறுநாள் அதன்மேல் ஆடை படிந்திருக்கும்.
அதை காய்ச்சினால் ஒரு எண்ணெய் வரும். அதற்கு, 'வெண்வழிச்செண்ணெய்' என்று பெயர். அது, தோலில் வரும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்' என்று கூறி, அந்த எண்ணெயை காய்ச்சி தந்தார்.
அதை தடவிய இரு நாட்களில், இருந்த இடம் தெரியாமல் அந்த தடிப்பு காணாமல் போய் விட்டது. இது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுகுறித்து நிறைய படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு கட்டத்தில், இதை முறைப்படி கற்றுக் கொள்வதற்காக, அமெரிக்காவின், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கு எதற்கு சிகிச்சை தேவை, எதற்கு தேவையில்லை என்று விளக்கமாக சொல்லித்தரும், 'நியூ பார்ன் கேர் ஸ்பெஷாலிட்டி' என்ற, 'ஆன்லைன்' பயிற்சியில் சேர்ந்தேன்.
மேலும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், குழந்தைகளுக்கு துாய்மையான, தரமான பொருட்களை தர வேண்டும் என்பதற்காக, 2018ல், 'ரூட் அண்டு சாயில்' நிறுவனத்தை பதிவு செய்தேன். இதில் பெரிய சந்தை இருக்கென்று தெரிந்தது. முறைப்படி, அனைத்து சான்றிதழ்களும் வாங்கினேன்.
முதலில் வெண்வழிச்செண்ணெயை, 'ஹேண்ட்மேடு கோக்கனட் வெர்ஜின் ஆயில்' என்ற பெயரில் சந்தைக்கு கொண்டு வந்தோம். வாங்கியவர்கள் மீண்டும் கேட்க ஆரம்பித்தனர்.
அதன்பின், குழந்தைகளுக்கான அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முடித்தேன். சிறிது சிறிதாக பிசினஸ் வளர்ந்தது. பொருட்களின் எண்ணிக்கையை அதிகமாக்கினோம். தற்போது சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விற்பனை செய்கிறோம். 40க்கும் மேற் பட்ட பொருட்கள் எங்களிடம் இருக்கின்றன.
குழந்தைகளுக்கானது என்பதால், ஒவ்வொரு பொருளை, 'பேக்' செய்யும்போதும், கவனமாகவும், அக்கறையாகவும் செய்கிறோம். 3.50 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்கிறோம்.
தொடர்புக்கு: 73050 67095
www.rootandsoil.in
அமெரிக்காவில் கலக்கும் சமையல் கலைஞர்!
அமெரிக்காவில் சமையல் கலைஞராக கலக்கும், தமிழர் அசோக் நாகேஸ்வரன்:ஈரோடு மாவட்டம், பெருந்துறை தான் என் சொந்த ஊர். பட்டப்படிப்பு முடித்த பின், மேற்படிப்புக்காக சென்னை சென்றேன். அப்படியே, மார்க்கெட்டிங் துறையில் வேலை. என் மனைவி மனிதவள துறையில் அதிகாரியாக
பணியாற்றினார்.அவருக்கு, அமெரிக்காவில் பெரிய நிறுவனமொன்றில் நல்ல வேலை கிடைத்தது. மனைவிக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, 3 வயது மகனுடன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தேன்.
அங்கு, மிசவுரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லுாயிஸ் நகரத்தில் இப்போது வசிக்கிறோம்.
அமெரிக்கா சென்றபின், மார்க்கெட்டிங்கை தொடரலாமா, வேறு ஏதேனும் புதிதாக செய்யலாமா என்ற தவிப்பு இருந்தது. அப்போது என் மனைவி, 'சமையலில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. அது குறித்து முறைப்படி நீங்கள் ஏன் படிக்கக்கூடாது?' என்று கேட்டார்.
அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். 40 வயதில் கல்லுாரிக்கு படிக்கச் செல்வது, இந்திய பின்னணி கொண்ட நமக்கு சற்று பழக்கப்படாத அனுபவம் தான். ஆனாலும், புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதற்கு நான் தயாராகவே இருந்தேன். இந்த மனோபாவம், என் வாழ்க்கையின் மாற்றத்துக்கு உதவி செய்தது.
நான் எந்த உணவகத்தையும் நடத்தவில்லை. தனிப்பட்ட நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றுக்கு மட்டும் சமைத்து கொடுக்கிறேன். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என, பல பிரபலங்களுக்கு சிறப்பு சமையல்காரராகவும் வேலை பார்க்கிறேன். இந்தியாவிலும் நிறைய பிரபலங்கள், என் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.
உணவு தொடர்பாக கிட்டத்தட்ட, 2,000 நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளேன். 90 நாடுகளின் உணவுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அதிகம் கேள்விப்படாத உணவுகள், சுவைத்திராத உணவுகள் என பரீட்சார்த்தமாக சமைத்து, வெற்றியும் பெற்றிருக்கிறேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக, சமையல் சார்ந்த ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன்.
அமெரிக்காவில் இருப்பதால், பல நவீன மாற்றங்களை இந்த துறையில் பார்க்கிறேன். சமைப்பதற்கு ரோபோக்கள் வந்துவிட்டன; சமையலிலும் செயற்கை நுண்ணறிவான, ஏ.ஐ., ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆனாலும், சமையல் கலைஞர்களின் வெற்றிடத்தை ரோபோக்களால் நிரப்ப முடியாது.முன்பை விட இப்போது, உணவு துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அடுத்த, 10 ஆண்டுகளில் இந்த தேவை இன்னும் அதிகரிக்கும்.
உலகம் உள்ள வரை உணவு இருக்கும்; உணவின் தேவை இருக்கும் வரை, நல்ல சமையல் கலைஞர்களின் தேவையும் இருக்கும்.