/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்!
/
50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்!
PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM

'ஸ்கின் கேர், ஹேர் கேர்' பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும், 'வில்வா' நிறுவனத்தின் உரிமையாளரான, கோவையைச் சேர்ந்த கிருத்திகா:
நான் பொறியியல் பட்டதாரி. திருமணத்துக்கு பின், 10 ஆண்டுகளாக ஹோம் மேக்கராகத் தான் இருந்தேன். அம்மாவின் மரணம் தான், இந்த பிசினசுக்கு அடித்தளம்.
அம்மாவிற்கு சில சரும பிரச்னைகள் இருந்தன. அவர் நிறைய மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. மருந்தின் வீரியம் அதிகமாகவே, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, அம்மா உயிரிழந்தார். அதனால், சரும பிரச்னைகள் தொடர்பான விஷயங்களை தேடித் தேடி படித்தேன்.
அதன்பின், 'நேச்சுரல் காஸ்மெட்டாலஜி' என்ற டிப்ளமா படிப்பையும் முடித்தேன். அந்த படிப்பின் வாயிலாக இயற்கையான பொருட்களில் இருந்து, சருமத்துக்கு தேவையான பொருட்கள் தயாரிப்பது தொடர்பான பல தகவல்களை கற்றுக் கொள்ள முடிந்தது.
எங்களுடையது விவசாய குடும்பம். எங்கள் தோட்டத்தில் அப்போது 10 ஆடுகளுக்கு மேல் இருந்தன. அதனால், ஆட்டுப்பாலில் சோப்பு தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
தயாரித்த சோப்பை முதலில் நான் பயன்படுத்தினேன். சரும பாதிப்புகள் எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்தபின், என் குழந்தைக்கு பயன்படுத்தினேன்.
மீதியிருந்த சோப்புகளை உறவினர்கள், தோழியருக்கு கொடுத்தேன். அனைவரிடமும் பாசிட்டிவ் பதில்கள் வந்தன. அப்போது, என் கணவர் தான், 'ஆட்டுப்பாலில் சோப் தயாரித்து, பிசினசாக மாற்றலாம்' என்று யோசனை கூறினார்.
வில்வ மரத்தின் இலைகளில், பல மருத்துவ குணங்கள் உண்டு என்பதால், எங்களுடைய பிராண்டுக்கு, 'வில்வா' என்ற பெயரை தேர்வு செய்தோம். சமூக வலைதளங்கள் வாயிலாக மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தோம்.
முதல் மாதமே, நாங்கள் எதிர்பாராத அளவுக்கு ஆர்டர்கள் வரத் துவங்கின. ஆர்டர்கள் அதிகரித்ததால், ஷாம்பு, எண்ணெய், லிப் பாம் என பல பொருட்களுக்கான தயாரிப்பு பணிகளை துவங்கினேன்.
'ஆன்லைன்' தான் எங்களின் பிரதான சந்தை. எனினும் சென்னை, கோவை, கொச்சி, பெங்களூரு போன்ற இடங்களில் ஷோரூம்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன் உட்பட 50 நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம்.
நிறைய செலிபிரிட்டிகள், எங்களிடம் இருந்து ஸ்கின் கேர் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இன்று, 150 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கிறேன். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.
உழைப்பதற்கு, 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும். நம் ஐடியா தனித்துவமாக இருந்து, பொருட்கள் தரமாக இருந்தால், முதலீடு என்பது இரண்டாம் பட்சம்தான்.

