'பசுமை சூழ்ந்த தோட்டத்தில் ஆரோக்கியமாக வாழ்கிறோம்!'
'பசுமை சூழ்ந்த தோட்டத்தில் ஆரோக்கியமாக வாழ்கிறோம்!'
PUBLISHED ON : ஆக 12, 2026 12:00 AM

இயற்கை சூழ்ந்த தோட்டத்தில் மகிழ்ச்சியாக வாழும், தேனி மாவட்டம், அன்னஞ்சி விலக்கு கிராமத்தைச் சேர்ந்த, 64 வயதாகும் ரவி:
என் சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் அதிகம். எங்களுக்கு சொந்தமான 4 ஏக்கரில் கரும்பு, தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை, அம்மா சாகுபடி செய்து வந்தார். ஒருமுறை பள்ளி சுற்றுலா சென்றபோது, ஒரு ஊரில், 'காலிபிளவர்' நாற்றுகளை பார்த்தேன். அவற்றை வாங்கி, எங்கள் தோட்டத்தில் நட்டு வைத்தேன்; அவை நன்கு வளர்ந்து, செழிப்பான விளைச்சல் கொடுத்தன.
எம்.எஸ்சி., விலங்கியல் படித்து முடித்து, முனைவர் பட்டமும் பெற்றதில், அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. தலைமை ஆசிரியராக பணியாற்றி, 2020ல் ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பின் தோட்டத்தில் வீடு கட்டி, விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.
எந்த ஊருக்கு சென்றாலும், அங்கு கண்ணில் படக்கூடிய புதுவிதமான செடிகளை வாங்கி, என் தோட்டத்தில் நடவு செய்வேன். அப்படி, சோதனை முயற்சியாக நான் நடவு செய்த செடிகள் அனைத்தும் நன்கு வளர்ந்துள்ளன.
இங்குள்ள எந்த செடிகளையும், களைகள் என வெட்டி அப்புறப்படுத்துவது கிடையாது. எல்லாமே உரங்களாக இருந்து, மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்கின்றன. தோட்டத்தில் நிறைய எருக்கன் செடிகள் உள்ளன. அவை, பூச்சி, நோய் தடுப்புத் தாவரங்களாக இருக்கின்றன.
எங்களது தென்னந்தோப்பில் ஊடுபயிராக பலவிதமான பழ மரங்கள், மூலிகைகளை சாகுபடி செய்துள்ளோம். 300 தென்னை மரங்கள் வாயிலாக, ஆண்டுக்கு 60,000 காய்கள் கிடைக்கின்றன. ஒரு காய், 15 ரூபாய் என விற்பனை செய்வதன் வாயிலாக, ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் வருமானமும், எல்லா செலவுகளும் போக, 7 லட்சம் ரூபாய் லாபமும் கிடைக்கிறது. இதுவே, எங்களுக்கு நிறைவான வருமானம் தான்.
எங்கள் தோட்டத்தில், 30க்கும் மேற்பட்ட மூலிகைகள் இருக்கின்றன. எப்போதும் மூலிகை காற்றை சுவாசித்து, ஆரோக்கியமாக இருக்கிறோம். மூலிகைகளை நாங்கள் விற்பனை செய்வதில்லை; உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கிறோம்.
தோட்டத்தில் பல வகை மரங்கள், செடி, கொடிகள் இருப்பதால், நிறைய இலைகள் மண்ணில் விழுந்து மட்கி, மண்ணை வளப்படுத்துகின்றன. அதனால், தென்னை உட்பட எந்த மரத்திற்கும் உரம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டுக்கு தேவையான காய்கறிகளையும் பயிர் செய்கிறோம். பசுமை சூழ்ந்த இந்த தற்சார்பு வாழ்க்கையால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருகிறோம்.
தொடர்புக்கு: 94863 74604.
