PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

மதுரை சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை குளிர்விக்க, 'தோப்பறை' எனும் தோல் பைகள் வாயிலாக தண்ணீர் பீய்ச்சும் வைபவம் நடக்கும். இந்த பைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கமுருகன்:
எங்கள் தாத்தா செய்த தொழில் இது. எனக்கு, என் அப்பா கற்றுக் கொடுத்தார். இந்த ஊரில் உள்ள பல குடும்பங்களுக்கு இது பூர்வீக தொழில் என்றே சொல்லலாம். இந்த ஆண்டு திருவிழாவுக்கு, 300 பேர், தோல் பைகள் தயாரிக்கிறோம்.
விவசாயக்கூலி, கட்டட வேலை என, எங்கள் எல்லாருக்கும் வே று தொழில்கள் இருக்கின்றன. நான் செருப்பு தைக்கும் தொழில் செய்கிறேன். ஆனால், ஜனவரி மாதம் வந்து விட்டால், மற்ற தொழில்களை எல்லாம் விட்டுவிட்டு, தோப்பறை செய்ய ஆரம்பித்து விடுவோம்.
திண்டுக்கல்லில் இருந்து ஆட்டுத்தோல்கள் வாங்கி, முதலில் தண்ணீரில் ஊற வைக்கணும். அதன்பின் சுண்ணாம்பு சேர்த்து, 10 நாட்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பின் சுரண்டினால், தோலில் இருந்த முடிகள் எல்லாம் உதிர்ந்து விடும்.
பி ன் கருவாப்பட்டை, ஆவாரங்குழை மூலிகைகள் சேர்த்து மீண்டும் ஊற வைக்க வேண்டும். இதன்பின், தோல் நிறம் மாறி மென்மையாகும். அதை காய வைத்து, கண்ணாடி பாட்டிலால் தேய்ப்போம்; தோல், பட்டு மாதிரி பளபளப்பாகும். இந்த முழு வேலையை முடிக்க மூன்று மாதங்கள் ஆகும்.
மீனாட்சி அம்மன் கோவிலில் கொடி ஏறும் அன்றே, தோப்பறை விற்பனைக்காக மதுரைக்கு நாங்கள் சென்று விடுவோம். திருவிழா முடியும் வரை அங்கு தான் தங்குவோம்.
ஒரு குடும்பம், 200 பைகள் வரை எடுத்துச் செல்லும். ஒரு தோப்பறை செய்ய, 500 ரூபாய் ஆகும்; 700 ரூபாய்க்கு விற்பனை செய்வோம். இதில், 15 லிட்டர் வரை தண்ணீர் ஊற்றலாம்.
எனக்கு இரு மகன்கள்; ஒருவர் டிப்ளமாவும், இன்னொருவர் இன்ஜினியரிங்கும் முடித்துள்ளனர். அவர்கள் சென்னையில் இருக்கின்றனர். ஆனால், தோப்பறை விற்பனைக்கு அவர்களும் வந்து விடுவர்.
இந்த தொழிலில் பெரிய லாபம் எதுவும் கிடையாது. ஆனால், இது எங்கள் பூர்வீக அடையாளம். மீனாட்சியை எங்கள் மகளாகவும், அழகரை மகனாகவும் தான் பார்க்கிறோம். புள்ளைக்கு செய்யும் விஷயத்தில் கணக்கு பார்க்கலாமா?
இங்கு இருக்கும் இளைய தலைமுறையினர் அனைவருக்கும் இந்த வேலை தெரியும். அழகர் ஆற்றில் இறங்கும் வழக்கம் இருக்கும் வரை, தோப்பறை செய்வதை எங்கள் தலைமுறையினர் தொடர்ந்து செய்வோம்.
தோப்பறை தைப்பது எங்கள் அடையாளம். நீங்க வேடிக்கை பார்க்கும் திருவிழாவிற்காக நாங்கள் வாழ்கிறோம். அதில் எங்களுக்கு பெருமை தான்.
