/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நோய் தடுப்பு முறைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும்!
/
நோய் தடுப்பு முறைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும்!
PUBLISHED ON : ஜூலை 09, 2025 12:00 AM

கோவை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா டாக்டராக பணியாற்றும் காவிய வர்ஷினி: அப்பா - அம்மா, தம்பி என அழகான குடும்பம் என்னுடையது. அப்பாவின் தொழில் நஷ்டத்தால், குடும்பத்தில் பெரிய இடி.
அதனால், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க முடியாத நிலை. 'பெண்ணை ஏதாவது வேலைக்கு அனுப்புங்கள்' என்று பலரும் கூற, 'சிறிது காலம் பொறு; படிக்கலாம்' என்று அம்மா மட்டுமே நம்பிக்கை கூறினார்.
பிளஸ் 2 முடித்ததில் இருந்து, உதவித்தொகை, கல்விக்கடன் என அலைந்தபடியே இருந்தேன். நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால், இரு ஆண்டுகள் கழித்து, கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லுாரியில், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிக்க, 'சீட்' கிடைத்தது. பலர் உதவியால் படிக்க ஆரம்பித்தேன்.
மொத்தம் ஐந்தாண்டு ஆண்டு படிப்பு அது. ஆனால், மூன்றாமாண்டு முதல், என் கல்வி செலவுகள், வீட்டு செலவுகளை நானும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பும், அழுத்தமும் உண்டானது.
கல்லுாரியில் படித்தபடியே யோகா வகுப்பு எடுப்பது, கிடைக்கிற வேலைகளை செய்வது என இருந்தேன். படிப்பை முடித்த ஒரே மாதத்தில், ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிக்கு சேர்ந்தேன்.
குடும்பத்திற்கென நிலையான வருமானம் உறுதியானது. அடிப்படை தேவைகளை, கடன் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. தம்பியை படிக்க வைத்தேன்.
மருத்துவப் பணிக்கான முக்கியத்துவம் உணர்ந்து, மருத்துவமனையையும் தாண்டி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை என் கடமையாக எடுத்து இருக்கிறேன்.
தவிர, சருமம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த மூலிகை பொருட் களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
நோய்க்கு மருந்து கொடுப்பதை தாண்டி, அது வராமல் தடுக்க என்ன செய்யலாம்; என்ன செய்யக்கூடாது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
அது தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறேன். சொந்தமாக யோகா, இயற்கை மருத்துவ நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பது தான் என் கனவு.
'அவங்க நல்லா படித்து வேலையில் சேர்ந்தாங்க' என்பதை விட, 'அவங்க, தன் வீட்டு கஷ்டத்திலும் விடாமல் படித்து வேலையில் சேர்ந்தாங்க' என்று கூறும்போது, எளிய குடும்பங்களைச் சேர்ந்த அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு அது அதிக நம்பிக்கை கொடுக்கும்.
அந்த நம்பிக்கையை கொடுக்கும் பலர் உருவாகி வர வேண்டும்.