/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
திருநங்கையருக்கு தனி பதிப்பகம் நடத்துகிறோம்!
/
திருநங்கையருக்கு தனி பதிப்பகம் நடத்துகிறோம்!
PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

மதுரையில், 'திருநங்கைகள் வள மையம்' என்ற அமைப்பை நடத்தி, அவர்களின் கல்விக்கு உதவி வரும் திருநங்கை ப்ரியா பாபு:
பள்ளிப் பருவத்தில் எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை அம்மா புரிந்து கொண்டாலும், அப்பாவும், இரண்டு அண்ணன்களும் என்னை வெறுத்தனர். சமூகத்தின் கேலி, கிண்டல்களால் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றேன்.
ஒரு கட்டத்தில், பிளஸ் 2க்கு மேல் என்னால் படிப்பை தொடர முடியவில்லை. புதிய திருநங்கையரின் அறிமுகம் கிடைத்ததால், அவர்களுடன் மும்பைக்கு சென்றேன். அங்கு பிச்சையெடுப்பது தான் ஒரே வாழ்வாதாரம் என்பதால், அதில் ஈடுபட்டு வந்தேன்.
கடந்த 1998-ல் நண்பர்கள் உதவியுடன் ஓர் அறக்கட்டளையில் சேர்ந்து, அங்கு இரண்டு ஆண்டுகள் சமூக சேவைகளில் ஈடுபட்டேன். கடந்த 2001-ல் தமிழகம் திரும்பிய பின், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில், 'ஆரோக்கியம்' எனும் நிறுவனத்தில் சேர்ந்து, திருநங்கையருக்கான சமூகப் பணிகள் செய்து வந்தேன்.
அப்போது, மதுரையில் இருந்து எங்கள் நிறுவனத்திற்கு வந்த வக்கீல் ரஜினி என்பவரிடம், திருநங்கையருக்கான உரிமைகள் குறித்து பேசியதுடன், எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதது குறித்து முறையிட்டோம்.
பின், ரஜினியும், நானும் சென்னை உயர் நீதிமன்றத்தில், 2004 மார்ச் 6-ம் தேதி ஒரு வழக்கு தொடர்ந்தோம். மூன்று மாதங்களுக்கு பின், 'திருநங்கையர் விரும்பிய பாலினத்தில் ஓட்டளிக்கலாம்' எனும் புரட்சிகரமான தீர்ப்பு கிடைத்தது.
இதுவரை எட்டு நுால்கள் எழுதியிருக்கிறேன். அவற்றில், 'மூன்றாம் பாலின் முகம்' எனும் நாவலுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், 'சிறந்த விளிம்புநிலை இலக்கிய விருது' கிடைத்தது.
மதுரை மீனாட்சி கல்லுாரி, அழகப்பா பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் அந்த நாவல் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் பலர், அதை ஆராய்ச்சி படிப்பிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இது தவிர, 'யு டியூப்' சேனலும் நடத்தி வருகிறேன். திருநங்கையருக்காகவே பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து, புத்தகங்கள் வெளியிடுகிறோம்.
ஒரு தனியார் நிறுவன உதவியுடன், 'ட்ரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் திருநங்கையருக்கான உணவகமும் நடத்தி வருகிறோம்.