PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மணி மார்க் கடலை மிட்டாய் கம்பெனி நிறுவனர் ஏ.சுந்தர்சிங்:
என் வாழ்க்கை, உழைப்பும் நம்பிக்கையும் சேர்ந்து எழுப்பிய ஒரு பயணம். நான், துாத்துக்குடி மாவட்டம் கானம் கிராமத்தில் பிறந்தேன்.
என் 12 வயதில், ஒரு மளிகை கடையில் வேலை செய்ய பெற்றோர் என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூன்று ஆண்டுகள் வேலை செய்த பின், என் அப்பாவின் அறிவுரைப்படி, திருப்பத்துாரில் இருந்த என் மாமாவின் கடலை மிட்டாய் கம்பெனியில் சேர்ந்தேன்.
அங்கு, கடலை மிட்டாய் செய்வது எப்படி என்று முழுமையாக கற்றுக் கொண்டேன். என் மாமா, குடியாத்தத்தில் கடலை மிட்டாய் விற்பனை செய்ய சொன்னார். தினமும், 30 - 35 கி.மீ., வரை சைக்கிளில் சென்று கடைகளில் மிட்டாய் சப்ளை செய்து விட்டு, பின் பணம் வசூலிப்பது என் வேலை.
திடீரென என் மாமா கம்பெனியில் உற்பத்தி குறைந்ததால், பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், நானும் இனி சொந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் அம்மா அறிவுரைப்படி திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்துக்கு பின், 29 வயதில் ஆற்காட்டில் ஒரு வாடகை வீட்டில், மூன்று தொழிலாளர்களுடன், 'மணி மார்க் கடலை மிட்டாய்' என்ற பெயரில், 30,000 ரூபாயில் தொழிலை ஆரம்பித்தேன். நானே கடலை மிட்டாய் தயாரித்து, 'பேக்' செய்து, சைக்கிளில் தினமும் 60 கி.மீ., சென்று விற்பனை செய்தேன்.
தரத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை. சுவையும் தரமும் மக்களின் நம்பிக்கையை பெற்று தந்தது. நான் இருந்த வாடகை இடத்தை சொந்தமாக வாங்கி, தொழிற்சாலையை விரிவுபடுத்தினேன்.
என் மகன்கள் படித்து முடித்த பின், குடும்ப தொழிலில் சேர விரும்பினர். நான் அவர்களுக்கு தொழிலின் அடிப்படைகளை கற்றுக் கொடுத்து, பொறுப்புகளை ஒப்படைத்தேன். அவர்கள் நவீன இயந்திரங்கள், புதிய பேக்கிங் என வியாபாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தனர்.
அதன்பின் ஆற்காடு, நாராயணபுரத்தில், 6 ஏக்கரில் ஒரு பெரிய தொழிற்சாலையை கட்டினேன். இன்று, 'ஆற்காடு மணி மார்க் புட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்று ஒரு பெயர் சொல்லும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் எங்கள் தயாரிப்புகள் செல்கின்றன.
பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருகிறோம்.
உழைப்பு இருந்தால், ஆரம்பம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை; தைரியமாக துவங்குங்கள். நேர்மை இருந்தால், மக்கள் நம்பிக்கை நிச்சயம் கிடைக்கும். குடும்பமும் துணையாக இருந்தால், எவரும் எந்த உயரத்தையும் அடையலாம்.
