/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கீரை சாகுபடியில் ஆண்டு முழுதும் வருமானம்!
/
கீரை சாகுபடியில் ஆண்டு முழுதும் வருமானம்!
PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள தெற்கு ஆனைக் குட்டத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுத்தாய்: என் சொந்த ஊர், மதுரை மாவட்டம், ராமராஜபுரம். திருமணமாகி, இங்கு வந்தேன். நானும் , என் கணவரும் சிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலையில், 25 ஆண்டுகள் வேலை செய்தோம்.
விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, சில ஆண்டுகளுக்கு முன் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது.
இதன்படி, எங்க ஊரில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. அந்த நேரத்தில் எங்க நிலத்தையும் சுத்தப்படுத்தினோம்.
'நிலத்தை தரிசா போட்டிருந்தா, மறுபடியும் சீமைக்கரு வேல மரங்கள் மண்டி , காடு மாதிரி ஆகிடும். ஏதாவது பயிர்கள் சாகுபடி செஞ்சா, வருமானம் பார்க்கலாம்' என்று சிலர் யோசனை கூறினர்.
இதனால், 2017 முதல் 2020ம் ஆண்டு வரைக்கும் சோளம், எள், துவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தோம். கணிசமான வருமானம் கிடைத்தது.
தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்கு போவதை நிறுத்திவிட்டு, முழுமையாக விவசாயத்தை மட்டும் கவனிக்க ஆரம்பித்தேன். எங்கள் நிலத்தில் உள்ள கிணற்றை துார்வாரி, இறவை பாசனம் வாயிலாக இயற்கை விவசாயத்தில் இறங்கினேன்.
முதல் முறையாக தலா, 25 சென்ட் நிலத்தில் கத்தரி, தக்காளி, வெண்டை, மிளகாய் பயிர்களை சாகுபடி செய்தேன். விளைந்த காய்கறிகளை உள் ளூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்தேன்.
அடுத்து கீரை சாகுபடி துவங்கினேன். நான் எதிர்பார்த்த மாதிரியே நல்ல விளைச்சலும் , விலையும் கிடைத்ததால், இப்போது வரை கீரை சாகுபடியை தொடர்ந்து செய்து வருகிறேன்.
தற்போது, 50 சென்ட் பரப்பில் கீரை சாகுபடி செய்கிறேன். ஆண்டு முழுக்க வருமானம் கிடைக்கிற மாதிரி, பாத்திகளாக பிரித்து கீரை உற்பத்தி செய்கிறேன். 10 வகையான கீரைகள் சாகுபடி செய்கிறேன்.
தலா, 8 சென்ட் பரப்பில் மொத்தம், 6 பாத்திகள் அமைத்திருக்கிறேன். ஏதாவது ஒரு பாத்தியில் இருந்து வாரத்திற்கு, 20 கட்டு கீரை கிடைத்துவிடும். ஒரு கட்டு கீரை, 20 ரூபாய் என்று விற்பனை செய்கிறேன்.
மாதத்திற்கு, 800 கட்டுகள் கீரை விற்பனை வாயிலாக, 16,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. கீரை அறுவடை செய்யும் பணியை நானே செய்து விடுவேன்.
பாத்தி தயார் செய்வது, விதை மற்றும் இடுபொருட்களுக்கு அதிகபட்சம், 2,000 ரூபாய் செலவாகு ம். மீதி 14,000 ரூபாய் லாபம். வருடத்திற்கு, 1,68,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. என்னை பொறுத்தவரை, இது நிறைவான லாபம்.
தொடர்புக்கு 93450 41293