/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உங்க வீட்டு கிச்சன் தான் எங்களுக்கு போட்டியே!
/
உங்க வீட்டு கிச்சன் தான் எங்களுக்கு போட்டியே!
PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM

சென்னை மயிலாப்பூரில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி வீட்டிற்கு எதிரில் அமைந்துள்ள, 'கேளிர் கேன்டீன்' உரிமையாளர் பார்கவ் - தன்யா தம்பதி:
பார்கவ்: 'ஸ்டாண்ட் அப்' காமெடியனா, மேடை கலைஞரா பிசியாக இருந்தவன் நான். கொரோனா வந்து, எல்லாவற்றையும் கலைத்து போட்டபோது யோசித்த சிறு ஐடியா தான், இன்று இவ்வளவு பெரிய பிசினஸா வளர்ந்திருக்கிறது.
மற்றபடி எனக்கோ, என் மனைவிக்கோ, ஹோட்டல் இண்டஸ்ட்ரியில் எந்த அனுபவமும் கிடையாது. நாங்கள், 'பெட் அனிமல்ஸ்' வளர்க்கிறோம். வெளியே போகும்போது, அவற்றையும் அழைத்து செல்வதில் உள்ள சிரமங்கள், சவால்களை அனுபவித்திருக்கிறோம். அதற்காகவே, கேளிர் கேன்டீனை, பெட்சுடன் வரக்கூடிய இடமாகவும் வைத்திருக்கிறோம்.
ஹோட்டல் துறையில் அனுபவம் உள்ளவங்களை தான் வேலைக்கு எடுப்போம்னு சொல்லாம, தேவை இருக்கிறவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். உதாரணத்துக்கு, ஒருவர் போட்டோகிராபராக இருப்பார். 'எனக்கு வாரத்தில் எல்லா நாளும் வேலை இருக்காது. வேலை இல்லாத நாட்களில் நான் இங்கே வந்து வேலை பார்க்கிறேன்' என்று வருவார்.
இன்னொருத்தர் நடிகர். 'எனக்கு நிறைய மக்களை சந்திக்கணும், என் கேரக்டருக்கு உதவியாக இருக்கும்' என வருவார். கல்லுாரி மாணவர்களும் பகுதி நேரமாக வேலை பார்க்கின்றனர்.
ஒரு நாளைக்கு 750 முதல் 800 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அடுத்தாண்டு இதை 3,000 ஆகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் 10,000 ஆகவும் உயர்த்துவதுமே இலக்கு!
தன்யா: நான் சென்னை பெண். 'சாப்ட்வேர்' துறையில் இருந்தேன். ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று கனவு காணும் லட்சக்கணக்கான நபர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். ஒரு நாள் அலுவலக நண்பர்களுடன், பார்கவின் ஸ்டாண்ட் அப் காமெடி பார்க்க போனேன். இருவரும் நிறைய பேசினோம். எங்கள் நட்பு காதலாகி, திருமணம் செய்து கொண்டோம்.
இருவருமே நல்லா சமைப்போம். 'லாக் டவுன்' நேரத்தில் அந்த ஆர்வம் இன்னும் அதிகமானது. பல ஆராய்ச்சிக்கு பின், 2023 ஆகஸ்டில், 'கேளிர் கேன்டீன்' ஆரம்பித்தோம்.
கனியன் பூங்குன்றனாரின், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரியில் உள்ள, கேளிர் என்ற அந்த ஒற்றை வார்த்தை போதும் என்று அதையே தேர்வு செய்தோம். இங்கு சாப்பிட வர்றவங்க எவ்வளவு பெரிய வி.ஐ.பி.,யாக இருந்தாலும், சாப்பிட்ட தட்டை அவங்களே தான் எடுத்துட்டு போய் கழுவ போடணும்.
மற்ற ரெஸ்டாரென்ட் எதுவும் எங்களுக்கு போட்டியில்லை. உங்கள் அம்மா, உங்க வீட்டு குக், உங்க வீட்டு கிச்சன் தான் எங்களுக்கு போட்டியே. உங்க வீட்டு சாப்பாட்டு ஸ்டைல் தான் இங்கு இருக்கும்!

